அரசியலை மக்கள் சேவையாக மாற்றியமைத்திட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
காலியில் (Galle) நேற்றைதினம் (28.10.2024) இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, “இந்த தேர்தலில் மக்களுக்கு கூறுவதற்கு விடயங்கள் இல்லாதவர்கள் பழைய கதைகளையே மீண்டும் கூறத்தொடங்கி இருக்கிறார்கள்.
திருட்டு இலக்கத் தகடு
புதியவர்களுக்கு அனுபவம் கிடையாதெனவும், பழக்கப்பட்டவர்களையே அனுப்பிவைக்குமாறும் அவர்கள் கூறுகிறார்கள்.
இவர்கள் கூறுகின்ற பழையவர்கள் சட்டத்தை முற்றாகவே மதிக்காமல் செயலாற்றுபவர்கள் என்பது அம்பலமாகி உள்ளது.
சாதாரண மனிதர் ஒருவரின் வாகன இலக்கத்தகடு விழுந்திருந்தால், வீதியில் மிகவும் விழிப்புடன் கவனமாகவே பயணிப்பார்கள்.
ஆனால் அரசியல்வாதிகள் இங்கிலாந்தில் இருந்து கள்ளத்தனமாக கொண்டுவந்து திருட்டு இலக்கத் தகடுகளுடன் வாகனங்கள் ஓட்டப்பட்டமை அம்பலமாகி உள்ளது.
அதைப்போலவே கோடிக்கணக்கான வாகனங்களை இனந்தெரியாதவர்கள் கொண்டுவந்து முற்றத்தில் வைத்துவிட்டுச்செல்வது இடம்பெற்று வருகின்றது.
புதிய மாற்றங்கள்
அவர்கள் இதுவரை சட்டத்துடன் தொடர்பு இல்லாதவர்களைப்போன்றே செயற்பட்டிருக்கிறார்கள்.
தற்போது மேடைகளில் கூறுகின்ற அனுபவம் அதுபோன்ற விடயங்களுக்கே இருக்கின்றது.
இப்படிப்பட்டவர்கள் இருந்த நாடாளுமன்றத்தையே மக்கள் வெறுக்கிறார்கள்.
தேசிய மக்கள் சக்தியின் சார்பாக முன்வந்துள்ளவர்கள் நாடாளுமன்றத்திற்கு புதியவர்களாக இருந்தபோதிலும் அரசியலுக்கு புதியவர்கள் அல்ல.
எந்தவொரு நேரத்திலும் நாடு அனர்த்தமொன்றை சந்திக்க நேரிட்டால் அதற்காக முன்நிற்பவர்கள்.
நாங்கள் கடமைகளைப் பொறுப்பேற்று சில தினங்களிலேயே புதிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளோம்.
எமது ஆட்சிக்காலத்தில் இந்த நாட்டை நல்லதொரு திசையைநோக்கி நிச்சயமாக மாற்றிடுவோம். அதற்காக அனைவரும் அணிதிரள்வோம்” என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.