கரூர் சம்பவத்துக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மட்டும் காரணமில்லை என நடிகர் அஜித் குமார் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர்.
சி.பி.ஐ. விசாரணை
இந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில், ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த அஜித் , கரூர் சம்பவத்துக்கு நாம் அனைவரும் தான் பொறுப்பேற்க வேண்டும்.
கூட்டம் திரட்டுவதைப் பெரிய விடயமாகக் காட்டுவதை நிறுத்த வேண்டும் என அஜித் குமார் வலியுறுத்தியுள்ளார்.
உயிரைப் பணயம்
கிரிக்கெட் விளையாட்டில் கூட்டம் கூடினால் இவ்வாறு நிகழ்வதில்லை என சுட்டிக்காட்டியுள்ள அவர் திரையரங்குகளில் முதல் காட்சி மற்றும் பிரபலங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் மாத்திரம் ஏன் இப்படி நிகழ்கிறது என அவர் கேள்வியெழுப்பினார்.

இந்த விடயங்கள் திரையுலகை தவறாகக் காட்டவே முயல்கிறது.
இரசிகர்களின் அன்புக்காகவே நடிகர்களான நாங்கள் உழைக்கிறோம் எனவே உயிரைப் பணயம் வைத்து அன்பு காட்ட வேண்டாம் என அஜித் கேட்டுக் கொண்டுள்ளார்.

