கனடாவின் (Canada) பிராம்ப்டனில் தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் என்று அழைக்கப்படும் நினைவுத் தூபி தொடர்பாக இலங்கையின் கடுமையான ஆட்சேபனைகளை வலியுறுத்தும் வகையில் கனேடிய உயர்ஸ்தானிகருக்கு வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி(Ali Sabry )அழைப்பு விடுத்துள்ளார்.
கனடாவில் உள்ள பிராம்ப்டனில் உள்ள சிங்குகூசி பூங்காவில் 2024 ஒகஸ்ட் 14ஆம் திகதி இந்த நினைவுச்சின்னத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இது கனடாவில் வாக்கு வங்கி அரசியலைத் தக்கவைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும் என்று, இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம்
கனடாவிற்குள் வாக்கு வங்கி அரசியலுக்காக தொடர்ந்து பரப்பப்படும் இந்த தவறான குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
மேலும், பிரம்டன் நகர சபையின் தவறான அறிவுரையற்ற நடவடிக்கை, கனடா மற்றும் இலங்கையில் உள்ள அமைதியை விரும்பும் அனைத்து மக்களையும் புண்படுத்துவதாக உள்ளதாக அமைச்சர் சப்ரி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இனப்படுகொலை என்று கூறப்படுவது தீங்கிழைக்கும் தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்ட புனைகதை என்றும், தேசிய அல்லது சர்வதேச ரீதியில் எந்தவொரு பொறுப்பான அதிகாரியாலும் நிரூபிக்கப்படவில்லை என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடி
கடந்த இரண்டு வருடங்களாக நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவிய போதிலும் மோதல் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கும் நிலையான அமைதியைக் கட்டியெழுப்புவதற்கும் இலங்கை அரசாங்கம் தொடர்ந்து முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
எனினும், இத்தகைய பிளவுபடுத்தும் நடவடிக்கைகள் பயங்கரவாதத்தை மகிமைப்படுத்தி முரண்பாடுகளை விதைத்து அந்த முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன.
எனவே, இருதரப்பு உறவுகளில் ஏற்படும் பாதிப்பை உணர்ந்து இந்த நினைவுச்சின்னத்தை நிர்மாணிப்பதை தடுக்க கனேடிய அரசாங்கம் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அமைச்சர் சப்ரி தெரிவித்துள்ளார்.
மேலும், பாதிப்பு ஏற்படாமல் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.