தற்போதைய அரசாங்கம் என்மீது சேறு பூசும் நடவடிக்கையை நிறுத்தி, பாதிக்கப்பட்ட
மக்களிற்கு அவர்களது காணிகள் மீளக்கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
தையிட்டி விவகாரம் தொடர்பில் ஊடகங்களுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
அங்கஜன் இராமநாதன் அனுப்பி வைத்த செய்திக் குறிப்பில் இவ்விடயம்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த செய்தி குறிப்பில்,
அண்மைய நாட்களாக, தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்ட விரோத விகாரை தொடர்பான
விடயங்கள் சமூக வலைத்தளங்களில் முக்கியமான பேசுபொருளாக அமைந்துள்ளது.
அங்கஜன் இராமநாதன் மறுப்பு
குறிப்பாக, கடந்த இரண்டு மூன்று நாட்களாக தற்பொழுதுள்ள ஆட்சியாளர்கள் சார்ந்த
சமூக ஊடகங்களில் நான் கூறியதாக சில தவறான தகவல்கள் பதிவேற்றப்பட்டுள்ளது.
அதாவது “இராணுவம் தம் வசம் வைத்துள்ள காணிகளை விட்டு வெளியேறும் போது
கட்டிடங்கள், விகாரைகளை இடித்து அழித்து விட்டு செல்வார்கள்” என்ற கருத்து
பரப்பப்படுகிறது.
இப்படியான ஒரு கருத்தை நான் எந்த இடத்திலும் கூறவில்லை. அவ்வாறு கூறுவதற்கான
அதிகாரம் எனக்கில்லை. அவர்களின் தரப்பை சார்ந்தவனும் நான் இல்லை. மக்களுடன்
இணைந்து மக்களின் கருத்துக்களை வெளிப்படுத்தி மக்களின் சார்பாகவே நான்
எப்போதும் செயற்பட்டுள்ளேன் என்பதனை ஆணித்தரமாக கூறுகின்றேன்.
அதேநேரம், பாதிக்கப்பட்டுள்ள மக்களிற்கு காணிக்கான நட்ட ஈட்டினை வழங்க வேண்டும்
என்றும் நான் எந்தச் சந்தர்ப்பத்திலும் கூறவில்லை.