பொதுப் பாதுகாப்புச் செயலாளர் ரவி செனவிரத்ன தொடர்பில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில சுமத்திய குற்றச்சாட்டுக்களுக்கு இதுவரையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரசாங்கம் எந்தவிதமான பதிலையும் வழங்கவில்லை என அறியமுடிகிறது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து உதய கம்மன்பில நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்படி குற்றச்சாட்டுக்கள் முன்வைத்ததோடு, பொதுப் பாதுகாப்புச் செயலாளர் ரவி செனவிரத்னவை உடன்பதவி நீக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், தென்னிலங்கை பத்திரிக்கை ஒன்றுக்கு கருத்து தெரிவித்த ரவி செனவிரத்ன, தற்போதைய ஊடகச் செயலாளரான அமைச்சர் விஜித ஹேரத் கலந்து கொள்ளும் அமைச்சரவைப் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது இது தொடர்பில் பதில் அளிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
ரவி செனவிரத்ன
மேலும், யார் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். அவற்றை கேட்டுக்கொள்ளமுடியும், ஆனால் உண்மைகளை மறைக்க முடியாது என ரவி செனவிரத்ன கூறியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்கும் வகையில் கடமை தவறியதற்காக ரவி செனவிரத்ன மீது உதய கம்மன்பில குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டுகளின் அடுக்குகளை பல்வேறு தரப்புகள் மீது நேற்றைய ஊடக சந்திப்பில் வெளிப்படுத்தியிருந்தார்.
இதன்படி நாட்டு மக்களின் சிந்திக்கும் மற்றும் தகவலறியும் உரிமைகளை ஜனாதிபதி வேண்டுமென்றே மீறியுள்ளார் என தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை
அரசியலமைப்பின் 38 ஆவது சரத்தை மீறியுள்ள ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணையை கொண்டு வர முடியும் என கூறியுள்ளார்.
குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பிரதான குற்றவாளியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ரவி செனவிரத்னவை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் கோரியிருந்தார்.
மேலும், குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் இரண்டு தாக்குதல்தாரிகளின் தந்தையான தொழிலதிபர் இப்ராஹிமை பாதுகாப்பதற்காக விசாரணைகளை திரிபுப்படுத்துவதற்காகவா ரவி செனவிரத்ன மற்றும் சானி அபேசேகரவை ஜனாதிபதி தன்னுடன் இணைத்துக் கொண்டார் என்ற சந்தேகம் காணப்படுகிறது என கருத்தை முன்வைத்திருந்தார்.
ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கை
அத்தோடு, பாதுகாப்பு தரப்புடன் தொடர்புடைய 17 உயர் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள பரிந்துரைவிடுத்திருந்தார்.
இதனை தொடர்ந்து, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கைகளை தெரிந்துக் கொள்ளும் தனியுரிமை கத்தோலிக்க சபைக்கு மாத்திரம் கிடையாது என்றும், குண்டுத்தாக்குதல் சம்பவத்தால் கத்தோலிக்கர்களை போன்று ஏனைய மதத்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனவும் குறிப்பிட்டார்.
ஆகவே உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை தேசிய பிரச்சினையாக கருத வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.