அரசியலமைப்பின்படி, ஜனாதிபதி பதவியை வகிக்கும் ஒருவர், சம்பளம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவு உரித்துரிமைகளை நாடாளுமன்ற பிரேரணை ஒன்றின் மூலம் அதிகரித்துக்கொள்ள முடியுமே தவிர அந்த உரித்துரிமைகளை குறைக்கக்கூடாது என்றே தெரிவிக்கப்பட்டிருக்கிறது என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை குறைப்பது குறித்து எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வழங்கப்பட்டிருக்கும் உத்தியோகபூர்வ வீடு
இது குறித்து மேலும் தெரிவிக்கையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்ததில் இருந்து முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகள் மற்றும் அவர்களின் பாதுகாப்பு தொடர்பிலே கதைத்து வருகிறது.
அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டிருக்கிறது.
அதேநேரம் தற்போது வழங்கப்பட்டிருக்கும் உத்தியோகபூர்வ வீடு தொடர்பில் பல்வேறு கதைகளை தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், இந்த விடயங்களை அரசாங்கம் வெளியில் தெரிவிப்பதற்கு முன்னர் அது தொடர்பில் அரசியலமைப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் விடயங்களை நன்கு விளங்கிக்கொள்ள வேண்டும்.
அரசியலமைப்பின் 36 (2) உறுப்புரையில், யாராவது ஒருவரினால் ஜனாதிபதி பதவி ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் நாடாளுமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதற்கும் அதன் பின்னர் அவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ள ஓய்வூதியம் பெறுவதற்கும் அந்த நபர் உரிமையுடையவராவார்.
25 தடவைகள் வெளிநாட்டு பயணம்
பின்னர் இந்த அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படும் திருத்தம், அரசியலமைப்பு முழுமையாக நீக்கப்படுதல் அல்லது மறுசீரமைப்பு செய்தல் மற்றும் அரசியலமைப்புக்கு உட்டபட்ட விடயம் ஒன்று பின்னர் ஏற்படுத்தப்பட்ட ஏதாவது ஒரு சட்டம் அல்லது சட்டத்தில் சில விதிமுறைகள் கடந்த காலத்துக்கு செல்லுபடியாகாது.
அதாவது எந்த ஜனாதிபதியினதும் உரிமைகளை இல்லாமலாக்க முடியாது.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்டதன் பின்னர் 25 தடவைகள் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்து வருகிறார்கள்.
அவர் நாட்டை பொறுப்பேற்றுக்கொண்டு நாட்டை கட்டியெழுப்ப முழு மூச்சுடன் செயற்பட்டு வந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.