தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் “உயிரற்ற” ஒரு வரவு செலவு திட்டத்தை முன்மொழிந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விமர்சித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு நேற்று (10.11.2025) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் தன் மீது போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தாலும் கூட உண்மையில் யார் சரி என்பதை பொதுமக்கள் இப்போது உணர்ந்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எதிர்ப்பு பேரணி
இதேவேளை, அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் 21 ஆம் திகதி நுகேகொடையில் ஏற்பாடு செய்திருக்கும் ஆர்ப்பாட்டப் பேரணியில் தான் பங்கேற்கப் போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறு பேரணியில் பங்கேற்காமல் இருப்பதற்கு இரு முக்கிய காரணங்கள் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடு முழுவதிலுமிருந்து தங்காலையில் உள்ள தனது வீட்டிற்கு தினமும் தனது நலம் விசாரிக்க வரும் மக்களைத் தவிர்க்க இயலாமை மற்றும் தங்காலையில் இருந்து நுகேகொடைக்கு பயணிக்க அதிக நேரம் செலவிட வேண்டியுள்ளமையே பேரணியில் பங்கேற்காமைக்கு காரணம் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும், அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் எடுக்கும் இத்தகைய நடவடிக்கைகள் தனது அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

