பொருளாதார ரீதியாக ஸ்திரமடைந்துள்ள நாட்டில் மீண்டும் வரிசை யுகம் ஒன்று உருவாகாமல் இருப்பது புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் முக்கிய பொறுப்பு என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (24.09.2024) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களித்த மக்களுக்கு எமது கட்சி சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
நாட்டை மீட்ட ரணில்
இதேவேளை, நாட்டில் 42 வீதத்துக்கும் அதிகமான மக்கள் புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வாக்களித்துள்ளனர்.
அவரால் முன்வைக்கப்பட்டிருந்த தேர்தல் கொள்கை பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த விடயங்களை செயற்படுத்துவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சொல்லப்பட்ட விடயங்களை செயற்படுத்துவதை மக்கள் பாரிய எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு அல்லது ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்தபோது, இலங்கையை ஸ்திரப்படுத்தி ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு தேவையான சூழலை ரணில் விக்ரமிங்க உருவாக்கினார்.
அவர், சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய சங்கங்களுக்கிடையில் இடம்பெறும் உலகில் நன்கொடை வழங்கும் குழுக்களுடன் கலந்துரையாடி வங்குராேத்து அடைந்த நாட்டை, வங்குராேத்து நிலையில் இருந்து விடுவித்தார்.
அநுரவின் பொறுப்பு
அவர் தயார் செய்துகொண்டு சென்ற வேலைத்திட்டங்களை விட, இலங்கை மக்கள் புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் முன்வைக்கப்பட்டிருக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.
அப்படியானால் அந்த பொறுப்பை இலங்கை மக்கள் ஏற்றுக்காெண்டுள்ளனர். இலங்கை மக்கள் பொறுப்பெடுத்திருக்கும் அந்த பொறுப்பு தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கிறோம்.
அதனால் நாட்டில் மீண்டும் வரிசை யுகம் ஒன்று ஏற்படாமல் இருப்பதற்கு அந்த பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டி இருக்கிறது” என்றார்.