முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையில் அநுர அலை! ஆட்சி மாற்றத்தில் ஏற்பட்ட அதிரடிகள்

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்று நிகழ்ந்து புதிய அரசாங்கம் பொறுப்பேற்று நேற்றுடன் 10 நாட்கள் நிறைவடைந்துள்ளன. 

இதுவரை நாட்களும் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு வந்த நிலையில், அதுவும் குறிப்பாக அனைவராலும் எதிர்பார்க்கப்படும் கட்சியைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த வருடத் தேர்தலில் அந்த மரபினை பொதுமக்கள் மாற்றியமைத்துள்ளனர்.

பெரும்பான்மை வாக்குகள் இல்லாத ஒரு ஜனாதிபதி, வெற்றிபெறுவார்கள் என எதிர்பார்க்கப்படாத ஒரு கட்சியின் வெற்றி என அனைத்துமே புதியதாய் இருக்கின்றது. 

அநுரவின் வெற்றி

உண்மையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் வெற்றிக்கு அவருடைய பிரசார உத்திகள், சிறந்த காய் நகர்த்தல்கள், கவர்ச்சிகரமான விளம்பரங்கள் காரணமாக இருப்பினும் இவை அனைத்தையும் தாண்டி கடந்த அரசாங்கங்கள் விட்ட தவறுகளும் மிகப்பெரிய காரணமாக அமைந்துள்ளன.

இலங்கையில் அநுர அலை! ஆட்சி மாற்றத்தில் ஏற்பட்ட அதிரடிகள் | Anura S New Government In Sri Lanka

அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்ட வெறுப்பு, விரக்தி, எதிர்போட்டியாளராக களமிறங்கிய சஜித் பிரேமதாசவின் அணுகுமுறைகள்,  சஜித் வெற்றிபெறக் கூடாது என்பதில் ரணில் காட்டிய  அதீத முயற்சி உள்ளிட்ட பல்வேறு காரணிகள் அநுரவின் வெற்றிக்கு வழிவகுத்திருக்கின்றன. 

பொருளாதாரத்தை முதன்மைப்படுத்திய ரணிலின் பிரசாரங்களின் ஊடாக அவர்  அடிமட்ட மக்களின் மன நிலையில் இருந்து சிந்திக்கவில்லையோ என்று தோன்றுகின்றது. 

அதேசமயம், இலங்கையைப் பொறுத்தமட்டில் ஒரு ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கு பிரதானமாக சிங்களவர்களின் வாக்குகளே முதன்மையானது. 

அடுத்த தேர்தலுக்கு தயாரான அநுர

ஆனால் கடந்த 2019ஆம் ஆண்டு களமிறங்கிய சஜித் பிரேமதாசவுக்கு  கிடைத்த தமிழர்களின் வாக்குகளை இம்முறையும் தக்க வைத்துக் கொள்வதற்கான முயற்சியை சஜித் எடுத்தாரே தவிர சிங்களவர்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ள தவறிவிட்டார்.

இலங்கையில் அநுர அலை! ஆட்சி மாற்றத்தில் ஏற்பட்ட அதிரடிகள் | Anura S New Government In Sri Lanka

இவ்வாறான  சில அடிப்படை காரணங்கள் சஜித் மற்றும் ரணிலின்  தோல்விக்கு வித்திட்டதுடன் அதுவே அநுரவின் வெற்றிக்கும் வழி வகுத்திருக்கின்றது. 

இது இவ்வாறிருக்க,  நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பொறுப்பேற்று தனது அணியில் இருந்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்களைக்கொண்டு புதிய அமைச்சரவையையும் உருவாக்கி அடுத்த தேர்தலுக்கும் தயாராகிவிட்டார் அநுர.

அநுரவிற்கு உள்ள சவால்கள் 

பதவி ஏற்ற மறுதினம் இரவு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.  தற்போது இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாற்றப்பட வேண்டியவர்கள் என தான் கருதுவதாகவும், எனவே நாடாளுமன்றத்தை கலைப்பதாகவும் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் ஜனாதிபதி தெளிவுபடுத்தியிருந்தார்.

இலங்கையில் அநுர அலை! ஆட்சி மாற்றத்தில் ஏற்பட்ட அதிரடிகள் | Anura S New Government In Sri Lanka

புதிய பொறுப்புக்களை ஏற்றுக் கொண்ட அநுரவின் முன்னால் பல்வேறு சவால்கள் உள்ளன.  ஊழல்வாதிகளை கைது செய்வது, நாட்டின் பொருளாதாரத்தை முன்னகர்த்துவது, மக்களது அடிப்படை பிரச்சினைகளுக்கு, குறிப்பாக சம்பள உயர்வு, மானியம்,  அதிகரித்துள்ள வாழ்க்கைச்சுமைக்கான தீர்வு மற்றும் அரசியல் தீர்வு உள்ளிட்ட பல சவால்களுக்கு அநுர அரசாங்கம் முகம் கொடுக்க வேண்டியிருக்கின்றது. 

இவை அனைத்திற்கும் முதன்மையாக தற்போது 3 பேராக அமைந்துள்ள தனது குறுகிய அமைச்சரவையை விரிவுபடுத்துவதற்கும், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்தைப் பெற்று ஒரு நிலையான அரசாங்கத்தை நிறுவி  ஆட்சியை முன்கொண்டு செல்ல வேண்டிய  மிகப்பெரிய பொறுப்பு அநுர சார் குழுவினரிடம் உள்ளது.

கொள்கையில் கோட்டாபயவை வீழ்த்திய அநுர

கடந்த 23ஆம் திகதி இலங்கை நாட்டினுடைய 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக உத்தியோகபூர்வமாக பதவியேற்ற காலத்தில் இருந்து தற்போது வரை பல்வேறு அரசியல் நகர்வுகளை  அவர் மேற்கொண்டிருக்கின்றார்.

குறிப்பாக, அவர் பதவியேற்ற விதமே பலரை கவர்ந்தது என்று கூட கூறலாம். எவ்வித அலட்டல்களும், கர்வமும் இல்லாத மிக எளிமையான பதவிப் பிரமாணம்.  ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.  

கடந்த 2019இல் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட கோட்டாபயவின் உத்தியோகப்பூர்வ பதவிப் பிரமாண நிகழ்வு அநுராதபுரத்தில் நிகழ்ந்தது. அவரது அமைச்சரவை கண்டி தலதா மாளிகையில் வைத்து பொறுப்பேற்றுக் கொண்டது.  அதிலும், ஜனாதிபதியாக பொறுப்பேற்ற போது தான் தனி சிங்கள மக்களின் வாக்குகளால் மாத்திரம் ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொள்கின்றேன் என கூறிய கோட்டாபயவின் கர்வமும் இவ்விடத்தில் நினைவுகூறத்தக்கது.

இதற்கு முன்னர் இருந்த ஆட்சியாளர்களிடம், அவர் சார் குழுவினரிடம் இருந்த ஆடம்பரம் தற்போதைய புதிய ஜனாதிபதி அநுரவின் நகர்வுகளில் துளியும் கிடையாது. 

வாகனங்கள் பறிமுதல்

அடுத்தக் கட்டமாக, இங்கு அதிகம் பேசப்பட்ட காலி முகத்திடல் வாகன காட்சி..  கடந்த அரசாங்க காலத்தில் அரச வாகனங்களைப் பெற்றுக் கொண்ட அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் தாங்கள் பெற்றுக் கொண்ட வாகனங்களை மீள ஒப்படைக்க வேண்டும் என்ற ஒரு உத்தரவினை அநுர பிறப்பிக்கின்றார்.

அதனையடுத்து,  கொழும்பு காலி முகத்திடலில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நூற்றுக் கணக்கான வாகனங்கள் கொணர்ந்து நிறுத்தப்படுகின்றன.  அத்தனையும் அதி சொகுசு வாகனங்கள்.  இவை அனைத்தும் எங்களது வரிப்பணம் என உணர்ந்த பொதுமக்கள் வெளிப்படையாகவே தங்களது கோபம் மற்றும் அதிருப்தியை காட்டியதை  கண்கூடாக காண முடிந்தது.

இவ்வாறு பெற்றுக் கொள்ளப்பட்ட வாகனங்களை அத்தியாவசிய சேவைகளுக்கு வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், அவை தற்போது தொடர்புடைய அமைச்சுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக, அரச சார்புடைய பல்வேறு நிறுவனங்களின் தலைவர்கள் உடனடியாக தங்களது பதவி விலகல்களை அறிவித்தனர். அதாவது புதிதாக பொறுப்பெடுத்திருக்கும் அமைச்சர்களின் எண்ணங்களுக்கு வழிவிட்டு நாங்கள் பதவி விலகுகின்றோம்  என அறிவித்ததை  அடுத்து ஓரிரு தினங்களிலேயே அந்த இடங்களுக்கு சிறந்த பின்புலம் கொண்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டனர் என்பதும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒரு விடயம்.

அரச ஊழியர்களின் நம்பிக்கை

அடுத்ததாக, பாதிக்கப்பட்டிருக்கக் கூடிய விவசாயிகளுக்கான உர மானியத்தை வழங்குவதற்கு புதிய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.  ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 15 ஆயிரம் ரூபா என்ற  மானியத் தொகையை 25ஆயிரம் ரூபாவாக உயர்த்தி வழங்க ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இலங்கையில் அநுர அலை! ஆட்சி மாற்றத்தில் ஏற்பட்ட அதிரடிகள் | Anura S New Government In Sri Lanka

எனினும், தற்போது நாட்டில் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த கொடுப்பனவினை வழங்க முடியாது என்ற தேர்தல் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலால்  அதிகரிப்பட்ட உர மானிய கொடுப்பனவு தேர்தலின் பின்னர் வழங்கப்படும் என்றும், ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 15ஆயிரம் ரூபா கொடுப்பனவு உடனடியாக விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு விடுவிக்கப்படும் என்றும் இரு தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதேசமயம், தங்களது சம்பள உயர்வு கோரி போராட்டம் நடத்தி பாதிக்கப்பட்டிருந்த அரச ஊழியர்கள் தொடர்பான அறிவிப்பினையும் புதிய அரசாங்கம் வெளியிட்டுள்ளது. 

குறிப்பாக, நாட்டின் தற்போதைய நிதி நிலையை கருத்திற் கொண்டு எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படும் என்றும், ஆனால் நிச்சயமாக சம்பள உயர்வை வழங்க வேண்டியது எமது பொறுப்பு என்றும் அமைச்சர் விஜித ஹேரத் தமது முதலாவது அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் குறிப்பிட்டிருந்தார்.

அநுர வழங்கிய உறுதி 

அதுபோக, நேற்றையதினம் விவசாய அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அங்கு கருத்து தெரிவிக்கும் போது,  குடிமக்களுக்காக பாடுபடும் அரச அதிகாரிகள் அரசியல் பழிவாங்கல்களுக்கு முகம் கொடுக்கும் நிலை இதுவரை காலமும் இருந்தபோதும் அந்த சம்பிரதாயம் இனிமேலும் நடக்காது என உறுதியளித்திருந்தார்.

இலங்கையில் அநுர அலை! ஆட்சி மாற்றத்தில் ஏற்பட்ட அதிரடிகள் | Anura S New Government In Sri Lanka

பதவி உயர்வுகள் உள்ளிட்ட விடயங்களுக்கு ஜனாதிபதி இதன்போது பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதில் சுட்டிக்காட்டத்தக்க விடயம் என்னவென்றால், ஜனாதிபதி தேர்தலின் போது தபால் மூல வாக்குகளில் ஓரிரு மாவட்டங்களைத் தவிர அனைத்து மாவட்டங்களிலும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலை வகித்து வந்தார்.

தபால் மூல வாக்குகளைச் செலுத்தும் அரச ஊழியர்களுள், இராணுவத்தினர், பொலிஸார் உள்ளிட்ட படையினர் மற்றும் ஏனைய அரச ஊழியர்களும் உள்ளடங்கும் நிலையில், இவர்களில் 75 வீதத்திற்கும் மேலானவர்கள்  மாற்றத்தை விரும்பி புதிய ஜனாதிபதி அநுரவுக்கு வாக்களித்திருக்கின்றார்கள்.  எனவே, அவர்கள் தொடர்பான பொறுப்புக்களும் ஜனாதிபதிக்கு மிக அதிகமானதாக இருக்கும்.

பொலிஸ் துறையில் மாற்றம் 

அதேசமயம், கடந்த அரசாங்கத்தின் கீழ் பொலிஸ் மா அதிபராக செயற்பட்ட தேசபந்து தென்னக்கோனின் நியமனம் நீதிமன்றத்தின் ஊடாக கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ள நிலையில்,  அநுரவின் கீழான புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற ஓரிரு நாட்களுக்குள் பதில் பொலிஸ் மா அதிபராக  சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் அநுர அலை! ஆட்சி மாற்றத்தில் ஏற்பட்ட அதிரடிகள் | Anura S New Government In Sri Lanka

அவர், கான்ஸ்டபிளாக பொலிஸ் துறைக்குள் இணைந்து கொண்டு படிப்படியாக முன்னேற்றம் கண்டவர் என்பதுடன் சிறந்த கல்வித் தகைமைகளையும் உடையவராக அடையாளப்படுத்தப்படுகின்றார். 

அதேசமயம், தேசபந்து தென்னக்கோன் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட காலத்தில் யுக்திய  விசேட நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்டிருந்த அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் மீள அழைக்கப்பட்டு அத்தியாவசிய கடமைகளுக்காக அவர்களை பணியில் ஈடுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ராஜபக்சவினரின் சவால் 

இவற்றைத் தவிர, ராஜபக்சவினரின் ஆட்சியின் போது அவர்களால் கொள்ளையடிக்கப்பட்டு உகண்டா நாட்டில் பெருமளவு டொலர்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வந்தன. 

இலங்கையில் அநுர அலை! ஆட்சி மாற்றத்தில் ஏற்பட்ட அதிரடிகள் | Anura S New Government In Sri Lanka

தொடர்ந்து அது தொடர்பான சர்ச்சைகள் நிலவி வந்த நிலையில், ராஜபக்சவினர் உண்மையில் கொள்ளையடித்தார்களா, அப்படி என்றால் புதிய அரசாங்கம் அதனை கண்டுபிடித்து டொலர்களை நாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் வாரிசான நாமல் ராஜபக்சவும், மொட்டுக் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசமும் புதிய அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளனர்.

அத்தோடு, கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் நடந்தேறிய மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பிலும்  நடவடிக்கை எடுக்க வேண்டிய, உண்மைகளை கண்டறிய வேண்டிய கடமை அநுர அரசாங்கத்திற்கு உண்டு.

மாற்றமும் மாயாஜாலமும்

இது மாத்திரம் அல்லாமல் முழு இலங்கையையும் அல்லலுறச் செய்த உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான நேர்மையான விசாரணை,  பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட மிகப்பெரிய கடமையும் அநுர அரசாங்கத்திற்கு உண்டு.

இவை அனைத்தையும் தாண்டி கடந்த காலங்களில், ஆட்சியில் உள்ள  அரசியல்வாதிகள் செய்த ஊழல் மோசடி தொடர்பாக அநுர குமார திஸாநாயக்க ஊடகங்கள் முன்னிலையில் பகிரங்கப்படுத்திய கோப்புகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயமும்,  ஊழல்வாதிகளுக்கு எதிராக எடுக்கப்போகும் நடவடிக்கைகளும் தான் எதிர்கால அநுரவின் ஆட்சிக்கு ஆயுளை நீட்டிக்க போகின்றன. 

பதவி ஏற்றப் பின்னர் அநுர குமார திஸாநாயக்க, தான் ஒன்றும் மாயாஜாலக் காரன் அல்ல என்று குறிப்பிட்டிருந்தார்.  ஒரே நேரத்தில் மாற்றங்களை  மேற்கொள்ள மாயாஜாலக் காரன் அல்லவெனினும், மாற்றத்தை விரும்பி மாற்றுத் தெரிவை நாடிய மக்களுக்கு படிப்படியாகவேணும் மாற்றம் நிகழத்தானே வேண்டும்…   பொறுத்திருந்து பார்க்கலாம் மாயாஜாலமும் மாற்றமும் எப்படி நிகழ்கிறது என்பதை..

 

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Benat அவரால் எழுதப்பட்டு,
04 October, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில்
வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும்
இல்லை.

<!–


இந்த கட்டுரை தொடர்பில் ஏதேனும் மாற்றுக்கருத்து இருப்பின்,

–>

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.