பேரழிவை ஏற்படுத்திய டித்வா சூறாவளியில் இருந்து மீள்வதற்கு இலங்கை போராடி
வருகின்றது என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கவலையுடன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு
குறிப்பிட்டுள்ளார்.
விலைமதிப்பற்ற ஆதரவுகளை
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“வரலாற்றுச் சிறப்புமிக்க கடன் மறுசீரமைப்பை நாங்கள் இப்போதுதான்
முடித்துள்ளோம். தற்போது டித்வா சூறாவளியால் கட்டுப்பாட்டை மீறிய நெருக்கடியை
எதிர்கொண்டுள்ளோம்.

ஆபரேஷன் சாகர் பந்து மூலம் இந்தியா வேகமாகப் பதிலளித்தது. அவர்கள் விமானங்கள்,
ஹெலிகள், விமானம் தாங்கிக் கப்பல் உள்ளிட்ட கடற்படைக் கப்பல்கள் மற்றும் தேசிய
பேரிடர் மீட்புப் படை வீரர்களை இலங்கைக்கு அனுப்பிவைத்தார்கள்.
அதேபோல் பல வெளிநாடுகளும் விலைமதிப்பற்ற ஆதரவுகளை – உதவிகளை எமக்கு வழங்கின.
மேற்படி நாடுகளுக்கு இலங்கை அரசு சார்பாக – பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக
நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
வெளிநாட்டு இராணுவத் தளங்கள்
இலங்கையைப் பொறுத்தவரை, வெற்றி என்பது சந்தை அணுகல் மற்றும் புதுப்பிக்கப்பட்ட
முதலீட்டு ஓட்டங்களைக் குறிக்கின்றது.

இலங்கையை ஒரு நிலையான மற்றும் நம்பகமான கூட்டாளியாகவும், இந்தியப் பெருங்கடல்
மையமாகவும் நிலைநிறுத்துவதற்காக நாங்கள் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின்
நிர்வாகத்துடன் இணைந்து செயற்படுகின்றோம்.
வெளிநாட்டு இராணுவத் தளங்கள் எதுவும் இலங்கைக்குள் அனுமதிக்கப்படுவதில்லை
என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கின்றோம்.
கொழும்புத் துறைமுக நகரம் முதன்மையாக ஒரு வணிக வளர்ச்சியாகும். இது
வேலைவாய்ப்புகளை உருவாக்கும், முதலீட்டை ஈர்க்கும் மற்றும் வருவாயை ஈட்டும்
நோக்கத்தில் முன்னெடுக்கப்படுகின்றது” என்றார்.

