வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றிய ஏனைய அரசாங்கங்கள் போல் அல்லாமல் செயல் வடிவில்
தமிழ் மக்களின் பி்ரச்சனைகளை ஜனாதிபதி நடைமுறைப்படுத்துவார் என தேசிய மக்கள்
சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று (23) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
“76 வருடங்களுக்கு பின்னர் ஊழலற்ற நேர்மையான ஒரு அரசாங்கத்தை
அமைத்திருக்கிறீர்கள். எமது வெற்றியை உறுதிப்படுத்திய அனைத்து மக்களுக்கும்
நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
மக்களுக்கான சேவை
எமது மக்களுக்கான சேவை இன்றிலிருந்து
ஆரம்பமாகின்றது. அனைத்து மக்களையும் உள்வாங்கி சம வாய்ப்புக்களையும்
உரிமையையும் பெற்றுக்கொள்வதில் நாங்கள் முன்னிலையில் இருப்போம்.
அதேபோல வளமான தேசத்தையும் அழகான வாழ்க்கையும் அமைப்பதற்கு நாட்டு மக்கள்
எங்களோடு ஒத்துழைக்க வேண்டும்.
எதிர்காலத்தில் எம்மால் செய்யப்படும் அனைத்து
வேலைத்திட்டங்களும் மக்கள் மயமானதாகவே இருக்கும்.
எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்ட விடயங்களை நிறைவேற்றுவதற்கு நாங்கள்
முன்னின்று உழைப்போம்.
தமிழ் மக்களின் பிரச்சினை
காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் மற்றும் தமிழ் மக்களிடம்
இருக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதி ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார்.
படிப்படியாக அதற்கான நடவடிக்கைகள் இடம்பெறும்.
வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றிய
ஏனைய அரசாங்கங்கள் போல் அல்லாது செயல் வடிவில் எமது ஜனாதிபதி
நடைமுறைப்படுத்துவார் என்பதில் பூரண நம்பிக்கை இருக்கிறது. நாங்களும் அதற்கான
ஒத்துழைப்புக்களை வழங்குவோம்” என்றார்.