அரச நிறுவனங்களில் ஏதேனும் நியமனம் மற்றும் இடமாற்றம் செய்வதற்கு முன்னர் விசாரணையொன்றை நடத்துமாறு அனைத்து நிறுவனங்களின் தலைவர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு மீண்டும் அறிவித்துள்ளது.
தேர்தல் காலத்தில் குறிப்பிட்ட சில நியமனங்கள் இடம்பெற்றதாக கிடைத்த தகவலையடுத்து ஆணைக்குழு இந்த அறிவித்தலை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர், “தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நியமனங்கள் மற்றும் இடமாற்றங்களை மேற்கொள்வது சட்டவிரோதமானது என்றும் அவ்வாறு நடந்திருந்தால் அது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
தேவையான நடவடிக்கை
ஒரு நிறுவனத்திற்கு தவிசாளரையோ அல்லது தலைவரையோ நியமிக்க வேண்டும் என்றால் அதற்கு எந்த தடையும் இல்லை, ஆனால் அது குறித்து ஆணைக்குழுவுக்கு முன்கூட்டியே தெரிவித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், தேர்தல்களை பாதிக்கும் நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் தவிர வேறு நியமனங்களை மாற்றுவதற்கு ஆணைக்குழு அனுமதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.