புதிய கணக்காய்வாளர் நாயகத்தை நியமிப்பதில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் பரிந்துரைக்கப்பட்ட நபர் அரசியலமைப்பு சபையின் ஒப்புதலுக்குத் தேவையான குறைந்தபட்ச வாக்குகளைப் பெற்றுக் கொள்ளவில்லை.
அதனால் புதிய கணக்காய்வாளர் நாயகம் நியமிப்பது மேலும் தாமதமாகியுள்ளது.
நிராகரிக்கப்பட்ட பரிந்துரைகள்
மூன்று மாத காலத்திற்கு பதில் கணக்காய்வாளர் நாயகமாகச் செயல்பட சிரேஷ்ட பதில் கணக்காய்வாளர் நாயகம் எல்.எஸ்.ஐ.ஜெயரத்னவின் பெயரை ஜனாதிபதி அரசியலமைப்பு சபைக்கு பரிந்துரைத்திருந்தார்.
அரசியலமைப்பின் படி, ஒரு நியமனத்தை அங்கீகரிக்கவோ அல்லது நிராகரிக்கவோ 10 உறுப்பினர்களைக் கொண்ட அரசியலமைப்பு சபையில் குறைந்தபட்சம் ஐந்து வாக்குகள் தேவை.
குறைந்தபட்ச வாக்குகள் இல்லாத நிலையில், அவரின் பெயர் பரிந்துரை நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி முன்மொழிந்த இரண்டு பெயர்களை அரசியலமைப்பு சபை இதற்கு முன்னரும் நிராகரித்திருந்தது.
ஜெயரத்னவை பதில் கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்க ஜனாதிபதியின் பரிந்துரையை பரிசீலிக்க அரசியலமைப்பு சபை வெள்ளிக்கிழமை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடியது.
இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு
சபையின் மூன்று சிவில் உறுப்பினர்களில் ஒருவர் அவரது பெயரை எதிர்த்ததோடு, அவருக்கு எதிராக சுமத்தப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளின் விவரங்களையும் வெளியிட்டார்.

மேலும், அவருக்கு எதிராக நடத்தப்பட்ட ஒழுக்காற்று விசாரணை மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் அவருக்கு எதிராக நடத்தப்பட்ட விசாரணையின் விவரங்கள் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், கவுன்சிலின் நான்கு உறுப்பினர்கள் வேட்பாளருக்கு ஆதரவாகவும், இரண்டு பேர் எதிராகவும் வாக்களித்தனர்.மேலும் இருவர் வாக்களிப்பில் இருந்து விலகினர்.

