யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற
உறுப்பினர்கள் மற்றும் தவிசாளர்களுக்கு முறையாக ஆசனங்கள் ஒதுக்கப்படவில்லை
என்று நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், இ.அர்ச்சுனா ஆகியோர்
குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று(17) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதன்போது மக்கள் பிரதிநிதிகளாக உள்ள உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்களுக்கு
ஆசனங்கள் பின்னால் ஒதுக்கப்பட்டுள்ளன எனவும், இது தொடர்பில் அரச அதிபர்,
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் கவனம் எடுக்க வேண்டும் எனவும்
நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார்.
அரச நெறிமுறைகளின் பிரகாரம்
இதன்போது கருத்துத் தெரிவித்த யாழ். மாவட்ட நாடாளுமன்ற இ.அர்ச்சுனா, “ஏனைய
மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நாடாளுமன்ற
உறுப்பினர்களுக்கு ஆசனங்கள் மேடையில் ஒதுக்கப்படுகின்றன.
யாழ். மாவட்டத்தில்
மட்டுமே வேறு மாதிரியாக ஆசனங்கள் ஒதுக்கப்படுகின்றன. இது தொடர்பில் கவனம்
செலுத்த வேண்டும்.” – என்றார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த யாழ். மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன், “அரச நெறிமுறைகளின் பிரகாரமே ஆசனங்களை
ஒதுக்கியுள்ளோம்” என்றார்.
ஒருங்கிணைப்புக் குழு தலைவர் அமைச்சர் இ.சந்திரசேகர் கருத்துத்
தெரிவிக்கையில், “யாழ்ப்பாணத்தில் இதுவரை காலமும் நாடாளுமன்ற உறுப்பினர்களின்
ஆசனங்கள் ஒதுக்கப்பட்ட நடைமுறையே இப்போதும் பின்பற்றப்படுகின்றது.
அதனை மாற்ற
வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்தால் அதனை
நடைமுறைப்படுத்த நான் தயார். அடுத்த அமர்வில் உள்ளூராட்சி தவிசாளர்களின் ஆசனம்
தொடர்பில் கவனம் எடுக்கப்படும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.