போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இடையே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விடுத்துள்ள எச்சரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, ஹிஸ்புல்லா அமைப்பு ஒப்பந்த மீறலில் ஈடுபட்டாலோ, ஆயுதங்களை கையிலெடுக்க முற்பட்டாலோ நாங்கள் தாக்குவோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, “அமெரிக்காவின் முழு புரிதலோடு, நாங்கள் ராணுவ நடவடிக்கையை மேற்கொள்வதற்கான முழு சுதந்திரம் பெற்றிருக்கிறோம்.
இஸ்ரேல் உடனான மோதல்
ஒப்பந்த மீறலில் ஹிஸ்புல்லா ஈடுபட்டால், ஆயுதங்களை கையிலெடுக்க அவர்கள் முற்பட்டால், நாங்கள் தாக்குவோம்.
அத்துடன், எல்லையருகே பயங்கரவாத கட்டமைப்பை எழுப்ப முயன்றால் நாங்கள் தாக்குவோம்.
ஒரு ஏவுகணையை ஏவினாலும், சுரங்கம் ஒன்றை தோண்டினாலும்,ஏவுகணைகளை சுமந்த வாகனங்களை கொண்டு வருகிறது என்றாலும் நாங்கள் தாக்குவோம்” என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போர்நிறுத்த ஒப்பந்தம்
இஸ்ரேல் மீது கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தாக்குதலை தொடர்ந்து ஓராண்டாக நீடிக்கும் பாலஸ்தீன இஸ்ரேல் மோதலில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
அதில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காசா பகுதியில் உயிரிழந்துள்ள நிலையில், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது.
இதேவேளை, இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலை அமெரிக்க ஜனாதிபதி பைடன் வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில், லெபனானில் இடம்பெற்றுவரும், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்புடனான மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவையும் ஒப்பு கொண்டுள்ளது.