அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டின் தாக்குதல்தாரிகளில் ஒருவர் இந்தியாவை பூர்விகமாக கொண்டவர் என தெரிவிக்கப்படுகின்றது.
அவுஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்திருந்தனர்.
இந்தநிலையில், சம்பவத்தில் தொடர்புடையவர் சந்தேகிக்கப்படும் நபரான சாஜித் அஹ்ரம் (50) என்பவர் ஹைதராபாத்தை பூர்வீகமாகக் கொண்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அதிகாரிகள்
சந்தேக நபர் இந்தியர் என இந்திய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த நபர் கடந்த 1998 ஆம் ஆண்டு மாணவர் விசாவில் அவர் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்துள்ளார்.

இதையடுத்து அவருடைய குடும்பத்தினருடனான தொடர்பு குறைவாகவே இருந்துள்ளதுடன் இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே அவர் இந்தியா வந்துள்ளார்.
இவர், இறுதியாக கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
தாக்குதல்தாரிகள்
சாஜித் அஹ்ரமின் மகனான நவீது என்பவர் கடந்த 2001 இல் அவுஸ்திரேலியாவில் பிறந்த நிலையில் அவருக்கு அந்த நாட்டு குடியுரிமை வழங்கப்பட்டு உள்ளது.
சாஜித் அஹ்ரம் ஹைதராபாத்தில் வணிகவியலில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

அவுஸ்திரேலியாவுக்கு இடம்பெயர்ந்த பின்னர் அவர் ஐரோப்பிய பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவரிடம் இன்னும் இந்திய கடவுச்சீட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை தாக்குதல்தாரிகள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என முன்னர் தகவல்கள் வெளியாகிய நிலையில் தற்போது இந்தியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

