பங்களாதேஷில் (Bangladesh) அரச வேலைவாய்ப்புகளுக்கான ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடாத்திய போராட்டம் வன்முறையாக மாறியதன் விளைவாக 17 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு 100இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
பங்களாதேஷில் சுதந்திர போராட்ட வீரர்களின் குடும்பத்தவர்களிற்கு அரசாங்க வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு வழங்கும் நடைமுறை 2018இல் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இந்த முறையின் கீழ் பெண்கள் மாற்றுத்திறனாளிகள் சிறுபான்மை இனக்குழுக்களை சேர்ந்தவர்களுக்கு அரசவேலைகளில் ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
மாணவர்கள் போராட்டம்
இந்நிலையில், இந்த நடைமுறையை மீண்டும் தொடங்குவதற்கு உயர்நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.மாற்றுத்திறனாளிகள் சிறுபான்மை இனங்களை சேர்ந்தவர்களிற்கு ஆறு வித ஒதுக்கீட்டை ஏற்றுக்கொண்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வம்சாவளியினருக்கு ஒதுக்கீடு வழங்கப்படுவதை எதிர்க்கின்றனர்.
இந்த நடைமுறையை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடாத்தி வரும் நிலையில், போராட்டக்காரர்களுக்கும் ஆளும் கட்சி ஆதரவாளர்களுக்குமிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்கள்
இந்நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் தலைநகர் டாக்காவில் அரச தொலைக்காட்சி தலைமையலுவலகத்திற்கு தீ வைத்ததையடுத்து அங்கு பலர் சிக்குண்டனர்.
அதேவேளை, நான்கு வாரங்களில் இது குறித்த தீர்ப்பை வழங்குவதாக தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம், மாணவர்களை கல்வி நடவடிக்கைகளை தொடருமாறு கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.