சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக அல்லாமல் அரசியல் நிலைப்பாட்டை வலுப்படுத்துவதற்காகவே மதுபான உரிமப் பத்திரங்கள் வழங்கப்பட்டதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
இலங்கை (Sri Lanka) மது ஒழிப்பு பேரவையின் புதிய அலுவலக திறப்பு விழாவில் இன்று (20.12.2024) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு குறிப்பிட்டு்ள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளாக அரசியல் நிலைப்பாட்டை வலுப்படுத்துவதற்காகவும் , அரசியல்வாதிகளை பலப்படுத்தவும், கட்சி தாவும் நடவடிக்கையை மேற்கொள்ளவுமே மதுபான உரிமப் பத்திரங்கள் வழங்கப்பட்டதாகவும் இந்தக் கலாசாரத்திலிருந்து விலகி நல்லொழுக்கமுள்ள நாகரீகமான சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர்
நாட்டின் சமூக ஒழுங்கு குறித்து உண்மையான யதார்த்தமான புரிதலை அனைவரும் கொண்டிருக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.
நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்புக்களை உயர் மட்டத்தில் வெற்றிகரமாகப் பேண வேண்டும் எனவும் இதன் பொருட்டு, சுற்றுலாத் துறையானது அந்நியச் செலாவணியை ஈட்டும் முக்கிய ஏற்றுமதி வணிகங்களில் ஒன்றாகப் பெயரிடப்பட்டுள்ளது.என்றும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.
சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் அதேவேளை, அதனால் சமூகத்தில் ஏற்படும் சமூக பாதிப்புகளைக் குறைப்பதற்கும், தடுப்பதற்கும் சமச்சீரான வேலைத்திட்டமொன்றும் முன்னெடுக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.