கடந்த ஆட்சிக் காலத்தில் நாம் புதிய மதுபானசாலைக்கான அனுமதியை அரசிடமிருந்து
பெற்றுக் கொண்டதாக பல்வேறு தரப்புகளாலும் முன்வைக்கப்படுகின்ற ஆதாரப்பூர்வமற்ற
தகவல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகி வருவதாக முன்னாள் உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பில் அவர், இன்றையதினம் (17) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே குறிப்பிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும், “தற்போது நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டு அதன் அடுத்த படியாக நாடாளுமன்ற தேர்தலை நோக்கி நாடு நகர்ந்து செல்கிறது.
முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள்
இந்நிலையில், என் மீதும் எனது
தந்தையார் மீதும் பலி சுமத்தும் நோக்கில் சிலர் எந்த விதமான ஆதாரமும் அற்ற
வீண் குற்றச்சாட்டுகளை தமது சுயலாப அரசியல் தேவைகளுக்காக முன்வைத்து
வருகின்றனர்.
இந்த ஆதாரப்பூர்வமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது யார் என பார்த்தால், கடந்த
காலத்தில் எம்மோடு நேரடியாக போட்டி போட்டு வெல்ல முடியாதவர்களே இவ்வாறான பொய்
குற்றச்சாட்டுகளை பரப்பி வருகின்றனர்.
ஒரு சில அரசியல்வாதிகளும், எமது சமூக
சேவைக்கு ஈடுகொடுக்க முடியாதவர்களுமே இவ்வாறு பொய்யாக வாய்க்கு வந்தபடி பேசி
வருகின்றனர்.
இவ்வாறானவர்களின் அர்த்தமற்ற பேச்சுகளுக்கு பதில் கூற வேண்டிய தேவை
எமக்கில்லை.
ஆனாலும் நம் மக்களை தெளிவுபடுத்த வேண்டிய தேவை நமக்கு உண்டு.
அதனால் தான் சத்திய கடதாசி ஊடாக நாம் எமது ஆதாரங்களை முன்வைத்து, புதிதாக எந்த
ஒரு மதுபானசாலை அனுமதியையும் அரசிடமிருந்து பெற்றுக் கொள்ளவில்லை என்பதை
மக்களுக்கு நிரூபித்துள்ளோம்” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.