இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து சாரதிகளின் தவறுகளை கண்டறிவதற்காக செயற்கை நுண்ணறிவுடனான கமரா கண்காணிப்பு தொகுதி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கதிர்காமம் இ.போ.சபை சாலைக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் அவர் இதை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.
கமரா அறிமுகம்
சாரதிகளால் ஏற்படும் தவறுகளை கட்டுப்படுத்தவே இத்தொகுதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக 40 உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன.
பேருந்து சாரதிகளின் களைப்பு மற்றும் நித்திரை கலக்கம் அல்லது சாரதியின் கண்கள் அயரும் போது குறித்த கமராவில் இருந்து ஒலி எழுப்பப்படும்.
மேலும் சாரதியின் ஆசனம் வைபிரேட் செய்யப்படும். அத்தோடு சாரதி தொழில் துறைக்கு வேண்டப்படாத செயல்களில் ஈடுபடுவோரும் இதன்போது கண்டுபிடிக்கப்படுவர்.
இந்த AI கண்காணிப்பு தொகுதி பொருத்தப்பட்ட பேருந்தில் பிரயாணம் செய்த அமைச்சர் அதன் செயற்பாட்டையும் பார்வையிட்டார்.
பாரிய அனர்த்தங்கள் தடுக்கப்படும்
அமைச்சர் இதன்போது கருத்து தெரிவிக்கையில், இந்த உபகரணம் மூலம் சாரதிகளின் தவறுகளால் ஏற்படும் பாரிய அனர்த்தங்கள் தடுக்கப்படும்.
இலங்கை போக்குவரத்து சபையில் அதிகரித்த பணியாளர்கள் இருக்கின்றனர். ஒவ்வொறு அமைச்சர்களும் தங்கள் அரசியல் செயல்பாட்டில் ஈடுபட்டவர்களுக்கு தொழிலை பெற்றுக் கொடுத்துள்ளனர்.
அந்த வகையில் வவுனியா சாலையில் ஒரு நட்டை கழற்றுவதற்கு கூட இரு விகித பணியாளர்கள் இருக்கிறார்கள். நாம் இதை நிர்வகிக்க தீர்மானித்துள்ளோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.