முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தன்னுடைய மனைவி மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழா ஒன்றுக்காக லண்டன் சென்றிருந்த நிலையில், குறித்த பயணத்திற்கு அரச நிதி தவறாக பயன்படுத்தப்பட்ட விடயத்தை இரண்டு மாதங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் அன்சாட் படுத்தியதாக அமைச்சரும், அவைத் தலைவருமான பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார்.
நாடாளுமன்றில் வைத்து இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ரணில் கைதிற்கான காரணங்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில், நீதி முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டிலேயே ரணில் விக்ரமசிங்கவை கைது செய்துள்ளோம். இதற்கான காரணங்கள் அனைத்தும் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால் எதிர்க்கட்சியினர், அவர்களின் உறுப்பினர்களுக்கு நடக்கும் போது பலிவாங்குவதாக தெரிவிக்கிறனர்.
மற்றையவருக்கு நடந்தால் அது நீதி தங்களுக்கு நடந்தால் அது பலிவாங்கலாக பார்க்கின்றனர்.
இன்றையதினம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டார்.
நிதியளிப்பு
இந்த நிலையில் இங்கிலாந்து பயணத்தின் ஒரு பகுதி தனிப்பட்ட காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் அரச நிதியில் இருந்து நிதியளிக்கப்பட்டதாகவும், 16.9 மில்லியன் ரூபா செலவாகியதாகவும் பொலிஸார் தெரிவித்த நிலையில் அது தொடர்பிலான விசாரணைக்காகவே அழைக்கப்பட்டிருந்தார்.
விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளராக இருந்த சமன் ஏகநாயக்க மற்றும் ரணிலின் தனிப்பட்ட செயலாளராக இருந்த சாண்ட்ரா பெரோரா ஆகியோரிடம் பொலிஸார் ஏற்கனவே வாக்குமூலம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.