சுயேச்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கு(ranil wickremesinghe) ஆதரவாக நேற்று (31) இரவு கம்பளை பொத்தலப்பிட்டிய மண்டபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆதரவாளர்களுக்கு பிரியாணி வழங்கி உபசரிப்பதற்கு தயாரான நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கண்டி உதவி தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் வந்து நிகழ்வை இரத்து செய்ததுடன் உணவுப் பொருட்களைக் கைப்பற்றி கம்பளை காவல்துறையில் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
திரண்டிருந்த ஆதரவாளர்களுக்கு இரவு உணவாக பிரியாணி வழங்கத் தயாராக இருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு கிடைத்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டனர்.
1500 ஆதரவாளர்களுக்கு வழங்க தயார் செய்யப்பட்ட பிரியாணி
சுமார் 1500 ஆதரவாளர்களுக்கு வழங்க தயார் செய்யப்பட்ட உணவை பெரிய பாத்திரங்களில் அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.
நாளை (01) இந்த மண்டபத்தில் நடக்கும் விழாவிற்காக உணவு தயார் செய்யப்பட்டுள்ளதாக சாப்பாடு கொண்டு வந்தவர்கள் தெரிவித்தனர்.
இரவு 8.30 மணிக்கு நடைபெறவிருந்த இந்த பொதுக்கூட்டத்தில் நீதியமைச்சர் அலி சப்ரி மற்றும் பலர் கலந்துகொள்ளவிருந்தனர்..
அவர்கள் வருவதற்கு முன், தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் வந்து, இந்த உணவை தங்கள் காவலில் எடுத்துச் சென்றனர்.
சட்ட விரோதம்
அந்த அதிகாரிகள் கம்பளை காவல்துறையில் உணவை விட்டுவிட்டு சென்ற நிலையில் இரவு ஒன்பது மணியளவில் அழைக்கப்பட்ட அமைச்சர்கள் வந்து அரசியல் கூட்டத்தை நடத்தினர்.
கட்சி உறுப்பினர்களை உபசரித்து வாக்குகளை பெறுவது சட்ட விரோதம் என்பதால் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.