கறுப்பு ஜூலைக் கலவரம் தொடர்பில் தவறான பிம்பத்தை காட்டி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார், நாடாளுமன்றத்தையும் பொதுமக்களையும் பிழையாக வழிநடத்தியதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜகத் மனுவர்ண, “முன்னாள் பத்திரிகையாளரான எஸ்.எம். மரிக்கார், கறுப்பு ஜூலை கலவரத்தின் போது மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் என்று கூறி புகைப்படம் ஒன்றை காட்டியுள்ளார்.
புகைப்படம்
ஒரு மதிப்புமிக்க ஊடக நிறுவனத்தில் பத்திரிகையாளராகப் பணியாற்றிய ஒருவர் உண்மைச் சரிபார்ப்பை மேற்கொள்ளத் தவறியது வருத்தமளிக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர், படம் தொடர்பாக தற்செயலாக தவறு செய்திருந்தால், அதை மன்னிக்கலாம், ஆனால் அது வேண்டுமென்றே செய்யப்பட்டிருந்தால், அது அவரது அரசியல் தந்திரத்தை நிரூபிக்கிறது என்று மனுவர்ண கூறியுள்ளார்.
மேலும், அரசாங்கம் அத்தகைய அரசியல் நடைமுறையை அனுமதிக்காது என்றும், கருப்பு ஜூலை கலவரத்திற்கு மக்கள் விடுதலை முன்னணி மீது பழி சுமத்த எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் முயற்சிகளை கண்டிப்பதாகவும் மனுவர்ண குறிப்பிட்டுள்ளார்.