உலகின் அவலட்சணமான மீனாகக் கருதப்படும் பிளாப் மீனை (Blob fish),நியூசிலாந்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அமைப்பொன்று, நியூசிலாந்தின் (New Zealand) இந்த ஆண்டுக்கான மீனாகத் தெரிவு செய்துள்ளது.
நியூசிலாந்தின் சுற்றுச்சூழல் அமைப்பானது அண்மையில் நடத்திய வாக்கெடுப்பில், பிளாப் மீனை பாதுகாக்க அதிக வாக்குகள் கிடைத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மீனுக்கு கிடைத்த அங்கீகாரம்
இதன் காரணமாகவே பிளாப் மீனுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.
உடல் முழுவதும் வழுவழுப்பாக இருக்கும் இந்த மீன், ஒரு அடி நீளம் வளரக்கூடியது என்றும், அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து கடற்பகுதிகளில் 2,000 முதல், 4,000 அடி ஆழத்தில் வாழ்கின்றன எனவும், இவற்றினால் ஏனைய மீன்களைப் போன்று விரைவாக நீந்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இவ்வகை மீன்கள் மனிதர்கள் உண்பதற்கு உகந்ததல்ல என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.