உக்ரைன்(ukraine) போரை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்கா மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்த நிலையில், பிரிட்டன் (uk), பிரான்ஸ்(france) உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் களத்தில் இறங்கி உள்ளன.
உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உடனான சந்திப்பை தொடர்ந்து, மறுநாளே பிரிட்டன் சென்ற உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டாமரை, லண்டனில் உள்ள பிரதமர் அலுவலக இல்லத்தில் சந்தித்தார்.
ஐரோப்பிய யூனியன் நாடுகளை சேர்ந்த, 10க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம், லண்டனில் நடப்பதற்கு முன், இந்த சந்திப்பு நடந்தது.
வெள்ளை மாளிகையில் நடந்தவற்றை யாரும் விரும்பவில்லை
அப்போது, உக்ரைனுக்கு பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்றும், புதிதாக போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என்றும் பிரிட்டன் பிரதமர் ஸ்டாமர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
வெள்ளை மாளிகையில் நடந்தவற்றை யாரும் விரும்பவில்லை. உக்ரைனுக்கு பிரிட்டனும், பிரிட்டன் மக்களும் முழு ஆதரவு அளிக்கிறோம். ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பு நாடுகளும் ஒன்று சேர்ந்து உக்ரைனுக்கு ஆதரவாக இருக்கும் என்று நம்புகிறேன். போர் நிறுத்தத்தில் விருப்பம் உள்ள ஐரோப்பிய நாடுகள் இதில் முன்வர வேண்டும்.
ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பு நாடுகள்
தற்போது, பிரிட்டன், பிரான்ஸ், கனடா மற்றும் சில நாடுகள் இணைந்து, போர் நிறுத்த வரைவு உடன்படிக்கை ஒன்றை தயார் செய்ததும், அது தொடர்பாக, அமெரிக்காவுடனும் ஆலோசனை நடத்தப்படும். ரஷ்ய ஜனாதிபதி புடின், உக்ரைன் மீது மீண்டும் போர் தொடுப்பதை தடுக்கும் வகையிலான, எந்தவொரு போர் நிறுத்தத்தையும் அமெரிக்கா ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பு நாடுகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க், இத்தாலி, துருக்கி மற்றும் நேட்டோ நாடுகளின் தலைவர்கள் லண்டன் சென்றுள்ளனர். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோவும் நேற்று லண்டன் சென்றார்.
லண்டனில் பிரதமர் இல்லத்துக்கு சென்ற உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை, பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் கட்டியணைத்து வரவேற்றார். அதைத் தொடர்ந்து, உக்ரைனுக்கு 3 பில்லியன் யூரோ கடனாக, பிரிட்டன் வழங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதையடுத்து, ஜெலன்ஸ்கி கூறுகையில், “ஆரம்பத்தில் இருந்தே முழு ஆதரவு வழங்கி வரும் பிரிட்டனுக்கு நன்றி. பிரிட்டன் வழங்கிய கடன் உதவி, உக்ரைன் ராணுவத்தை வலுவாக்க உதவும். ரஷ்யா கைப்பற்றிய சொத்துக்களை உக்ரைன் மீட்டதும், அதிலிருந்து கிடைக்கும் வருவாயை கொண்டு, இந்த கடனை திருப்பிச் செலுத்துவோம்,” என்றார்.