இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் ஒன்றுக்கான சாத்தியம் தொடர்ந்திருப்பதாக பிரித்தானியா (United Kingdom), அதன் பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பிரிட்டன் பிரஜைகளுக்கு அந்தந்த நாடுகளில் நிலவும் பாதுகாப்பு மற்றும் ஆபத்தான நிலைமைகள் குறித்து பிரிட்டனின் வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி நிறுவனம் அடிக்கடி பயண ஆலோசனைகளை வழங்குவது வழக்கமாகும்.
அந்த வகையில் இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் ஒன்றுக்கான சாத்தியம் இருப்பதாக கடந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் அமெரிக்கா (United States) மற்றும் பிரிட்டன் என்பன எச்சரிக்கை விடுத்திருந்தன.
பயங்கரவாத தாக்குதல்
இந்நிலையில் புத்தாண்டில் குறித்த எச்சரிக்கையை புதுப்பித்துள்ள பிரிட்டன், இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்களுக்கான சாத்தியம் இன்னும் தொடர்ந்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.
இம்முறை யூத அல்லது முஸ்லிம் சமூகத்தவர்களை இலக்கு வைத்தே அவ்வாறான தாக்குதல் இடம்பெறலாம் என்றும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.