ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Disanayaka), எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவை (Harsha De Silva) கேலி செய்யும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
இன்று 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் போது, ஹர்ஷ டி சில்வாவை நோக்கி நீங்கள் கேட்கும் அனைத்தையும் என்னால் வழங்க முடியாது என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மேலும் அவர், “ஹர்ஷ, நீங்கள் கேட்கும் அனைத்தையும் என்னால் வழங்க முடியாது. கொழும்பு மாவட்டத் தலைமைப் பதவியை நான் உங்களுக்கு எவ்வாறு வழங்க முடியும்? என்னால் அதை உங்களுக்கு வழங்க முடியாது” என்று நகைச்சுவையாகக் கூறினார்.
தலைமைப் பதவி
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கட்சியின் கொழும்பு மாவட்டத்திற்கான தலைமைப் பதவி வழங்கப்பட்டது.
இருப்பினும் இந்த விடயம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா அண்மையில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி இதனை விமர்சிக்கும் வகையில் கருத்து தெரிவித்தார்.
இதன்போது, நாடாளுமன்றில் சில உறுப்பினர்கள் கேலியாக சிரிக்கவும் செய்தனர். எனவே, இவ்வாறானதொரு கருத்து, ஐக்கிய மக்கள் சக்திக்குள் உள்ள உள் அதிகாரப் போராட்டங்களைக் குறிக்கும் வகையில் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் விமர்சிக்கின்றன.