2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு யோசனை(பாதீடு) மீதான விவாதம் 2025 பெப்ரவரி 18 முதல் மார்ச் 21, வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானம், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நேற்று(31) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், 2025ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு யோசனையை முதல் வாசிப்புக்காக 2025 ஜனவரி 09ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் நேற்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு
அதன்படி, ஒதுக்கீட்டு யோசனையின் இரண்டாவது வாசிப்பு பெப்ரவரி 17 ஆம் திகதி நடைபெற உள்ளது.
இரண்டாவது வாசிப்புக்கான விவாதத்தை பெப்ரவரி 18 முதல் 25 வரை 7 நாட்களுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன் பின்னர், யோசனையின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பெப்ரவரி 25 ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வரவுசெலவுத் திட்ட விவாதம்
ஒதுக்கீட்டு யோசனை மீதான குழுநிலை விவாதம் 2025 பெப்ரவரி 27 முதல் மார்ச் 21 வரை 4 சனிக்கிழமைகள் உட்பட 19 நாட்களுக்கு நடைபெற உள்ளது.
இதேவேளை, ஒதுக்கீட்டு யோசனையின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பை மார்ச் 21 ஆம் திகதியன்று மாலை 6.00 மணிக்கு நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாதீட்டு காலத்தில், வாய்மொழி பதில்களுக்கான 5 கேள்விகளுக்கு முற்பகல் 9.30 மணி முதல் 10.00 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது, மேலும் வரவுசெலவுத் திட்ட விவாதம் முற்பகல் 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெறவுள்ளது.