கெஹலிய ரம்புக்வெல்ல காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற கண்புரை மருந்து காரணமாக பார்வையிழந்தவர்களுக்கு நட்டஈடு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பதவிக்காலத்தில், நுவரெலியா மாவட்ட மருத்துவமனையில் நடைபெற்ற கண்புரை சத்திரசிகிச்சையின் பின்னர் 17 நோயாளர்கள் பார்வை இழந்திருந்தனர்.
அதனையடுத்து சத்திரசிகிச்சைகள் உடனடியாக இடைநிறுத்தப்பட்டு, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், தரமற்ற மருந்துகள் காரணமாகவே நோயாளிகளின் பார்வை பறிபோனமை தெரிய வந்திருந்தது.
அமைச்சரவை அங்கீகாரம்
இந்நிலையில் அவ்வாறு பார்வை பறிபோன 17 நோயாளர்களுக்கு நட்டஈடு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்றைய நாடாளுமன்ற அமர்வில் தெரிவித்துள்ளார்.
குறித்த மருந்து இறக்குமதிக்கு காரணமான அனைத்து தரப்பினருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் 12 நோயாளிகளுக்கு பத்து லட்சம் வீதமும், இரண்டு நோயாளிகளுக்கு ஏழு இலட்சத்து ஐம்பதினாயிரமும், ஒரு நோயாளிக்கு ஏழு இலட்சமும், இன்னும் இரண்டு நோயாளிகளுக்கு இரண்டரை இலட்சமும் வீதமும் நட்டஈடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.