“உங்களுக்கு வீடு – நாட்டுக்கு நாளை” வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கு வழங்கப்படும் அரச மானியத் தொகையை உயர்த்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நேற்று (21-04-2025) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
வறுமையில் உள்ள அல்லது குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வீட்டு வசதிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், அதனுடன் தொடர்புடைய வறுமையை குறைப்பதற்கும் இந்த வீட்டு வசதித் திட்டம் நோக்கமாகக் கொண்டு செயற்படுத்தப்படுகிறது.
குறைந்த வருமானம்
இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவிலும் வறுமையில் உள்ள அல்லது குறைந்த வருமானம் பெறும் ஒரு குடும்பம் முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு, வீடு கட்டுவதற்கு அல்லது மேம்படுத்துவதற்கு கட்டுமான முன்னேற்றத்தின் அடிப்படையில் மானியத் தொகை வழங்கப்படுகிறது.

தெரிவு செய்யப்படும் பயனாளி, குறைந்தபட்சம் 550 சதுர அடி பரப்பளவு கொண்ட வீடு ஒன்றை கட்ட வேண்டும். இதற்காக அரசு வழங்கும் 650,000 ரூபா மானியத் தொகைக்கு மேல், மீதமுள்ள செலவை பயனாளி ஏற்க வேண்டும்.
திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது ஒரு வீட்டின் மதிப்பீட்டு செலவு 1,147,000 ரூபாவாக இருந்தது.
ஆனால், தற்போது இந்த செலவு 1,764,000 ரூபாவாக உயர்ந்துள்ளது.
முன்வைத்த யோசனை
அரச மானியத் தொகைக்கு மேல் மீதமுள்ள செலவை ஏற்க தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் பொருளாதார நிலைமைக்கு அமைய சாத்தியமில்லை என்பதால், தற்போது வழங்கப்படும் 650,000 ரூபா மானியத் தொகையை 1,000,000 ரூபாவாக உயர்த்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில் நகர அபிவிருத்தி, கட்டுமானம் மற்றும் வீட்டு வசதி அமைச்சர் (MOUDH) முன்வைத்த குறித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

