எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கட்சி எதுவாகவிருந்தாலும் மதுசாரம் மற்றும்
புகைப்பிடித்தலுக்கு எதிராக செயற்படும் வேட்பாளர்களை கண்டறிந்து அவர்களை வெற்றிபெற
வைக்கவேண்டும் என்று மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம்
பொதுமக்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
அத்துடன் மதுசார உற்பத்தி நிறுவனங்கள், புகையிலை உற்பத்தி நிறுவனங்கள்,கஞ்சாவை
சட்டரீதியாக்க முயற்சிப்பவர்களின் செயற்பாடுகளுக்கு எதிரான கொள்கையை அரசியல்
கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட பொதுமக்கள்
வலியுறுத்த வேண்டும் எனவும் கோரப்பட்டது.
யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து
தெரிவித்தபோதே மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலைய பிரதிநிதிகள்
இவ்வாறு கோரிக்கையை முன்வைத்தனர்.
மதுசாரப் பாவனை
மேலும் தெரிவிக்கையில், “சிகரெட் பாவனையினால் எமது நாட்டில் வருடத்துக்கு இருபதாயிரம் பேரும்
நாளொன்றுக்கு அறுபது பேரும் மரணிக்கின்றனர்.
மதுசாரப் பாவனையினால் நாளாந்தம் 40 பேர் மரணிக்கின்றனர்.
இவ்வாறான நிலையில் இவற்றை ஊக்குவிக்கும் கொள்கைகளை தடுப்பதற்காக செயற்படும்
நபர்களை மக்கள் தமது பிரதிநிதியாக தெரிவு செய்யவேண்டும்.
மதுசாரம் மற்றும் சிகரெட் வரியினால் தான் அரசாங்கம் நிலைநாட்டப்படுகிறது
என்கிற தவறான கருத்து பலரிடம் உள்ளது. உண்மையில் சிகரெட் மற்றும் மதுசார
பாவனையில் ஏற்படும் சுகாதாரதுறை மற்றும் பொருளாதார துறைக்கு ஏற்படும் செலவு
அதைவிட அதிகமாகும்.
எமது நாட்டில் விற்பனையாகும் சிகரெட்டை எடுத்துக்கொண்டால் அந்த நிறுவனத்தின்
92 வீதமான பங்குகள் பிரித்தானியா மற்றும் அமெரிக்க வல்லரசு நாடுகளுக்கு
சொந்தமானது.
போலித்தகவல்
இதனால் பெருமளவு டொலர் நாட்டை விட்டு செல்கிறது.
மதுசாரத்தின் விலை அதிகரிப்பால் கசிப்பு விற்பனை அதிகரிப்பதாக பரப்பப்படும்
தகவல் போலியானது.
போதைப்பொருள் விற்பனையாளர்கள், சிகரெட் மற்றும் மதுசார நிறுவனங்கள்
என்பவற்றுடன் எந்தெந்த அரசியல்வாதிகளுக்கு தொடர்புள்ளது என்பதை மக்கள் சரியாக
இனங்காண வேண்டும்.
பொதுமக்கள் இந்த நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எதிர்காலத்தில் எமது
பிள்ளைகள் போதைப்பொருள் மற்றும் மதுசார சிகரெட் பாவனைக்கு உட்படாத வகையில்
வாழும் சூழலை உருவாக்க சிறந்த தலைவரை தெரிவு செய்ய வேண்டும்” – என்றனர்.
மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் சிரேஸ்ட நிகழ்ச்சி திட்ட அதிகாரி ஏ.சி.ரகீம்,
நிகழ்ச்சி திட்ட அதிகாரி செல்லத்துரை நிதர்சனா,
வடபகுதி இணைப்பாளர் ஆறுமுகம் கோடீஸ்வரன் ஆகியோர் ஊடக சந்திப்பில் கலந்து
கொண்டு கருத்து தெரிவித்தனர்.