அமெரிக்க ஜனநாயக கட்சியில் இருந்து, தொழில்நுட்ப கோடீஸ்வரரான எலோன் மஸ்க்கை “ஜனாதிபதி மஸ்க்” என்று சித்தரித்த நிலையில் அவர் அமெரிக்க ஜனாதிபதியாக வருவாரா என்பதற்கு தற்போது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்(donald trump) பதிலளித்துள்ளார்.
வரவிருக்கும் டிரம்ப் நிர்வாகத்தில் பெரும் அதிகாரத்தை வைத்திருக்கப்போகும் எலோன் மஸ்க்(elon musk) ஒரு நாள் அமெரிக்க ஜனாதியாக முடியுமா என்ற கேள்விக்கு இன்று (23)ஞாயிற்றுக்கிழமை, டொனால்ட் டிரம்ப் பதிலளித்தார்.
அமெரிக்க ஜனாதிபதியாக வருபவர் நாட்டில் பிறக்கவேண்டுமென்ற அமெரிக்க விதிகளை அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதியாக வர மாட்டார்
அரிசோனாவின் பீனிக்ஸ் நகரில் நடந்த குடியரசுக் கட்சி மாநாட்டில் பேசிய டிரம்ப், “அவர் ஜனாதிபதியாக வர மாட்டார், அதை நான் உங்களுக்குச் சொல்ல முடியும்” என்று கூறினார்.
தென்னாபிரிக்காவில்(south africa) பிறந்த டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் முதலாளியைப் பற்றி கூறிய டிரம்ப், “அவர் ஏன் இருக்க முடியாது என்று உங்களுக்குத் தெரியுமா? அவர் இந்த நாட்டில் பிறக்கவில்லை” என்று தெரிவித்தார்.
அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள விடயம்
அமெரிக்க அரசியலமைப்பு ஒரு ஜனாதிபதி இயற்கையாக பிறந்த அமெரிக்க குடிமகனாக இருக்க வேண்டும் என தெரிவிக்கிறது.
ட்ரம்பின் ஆலோசகராக பணியாற்றும் மஸ்க்கின் செல்வாக்கு, ஜனநாயகக் கட்சித் தாக்குதல்களுக்கு ஒரு மையப் புள்ளியாக மாறியுள்ளது, தேர்ந்தெடுக்கப்படாத குடிமகன் எப்படி இவ்வளவு அதிகாரத்தைப் பயன்படுத்த முடியும் என்ற கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.