பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் நான்கு புதிய அமைப்புகளை சேர்த்துள்ளதாகக் கனடா அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நடவடிக்கைகள் கனேடியர்கள் மற்றும் சமூகத்தினரை அச்சுறுத்தல், வெறுப்பு மற்றும் வன்முறை பயங்கரவாதச் செயல்களிலிருந்து பாதுகாக்க உதவும் என அந்நாட்டு அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கரி ஆனந்தசங்கரி குறித்த குழுக்களைப் பயங்கரவாதப் பட்டியலில் சேர்ப்பதாக அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சேர்க்கப்பட்ட 4 அமைப்புக்கள்
அந்தப் பட்டியலில், 764, மனியாக் மேர்டர் கல்ட் (Maniac Murder Cult), டெரர்கிராம் கூட்டு (Terrorgram Collective, ஈராக் மற்றும் சிரிய இஸ்லாமிய அரசின் (ISIS, அல்லது Daesh) இணை அமைப்பான இஸ்லாமிய அரசு-மொசாம்பிக் (Islamic State-Mozambique) ஆகிய அமைப்புக்களை சேர்த்துள்ளது.
கனடாவின் குற்றவியல் சட்டத்தின் கீழ், இந்த அமைப்புகள் இப்போது சட்டப்படி “பயங்கரவாதக் குழுக்கள்” என வரையறுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்தக் குழுக்களுக்குச் சொந்தமான கனடாவில் உள்ள அனைத்துச் சொத்துக்களும் முடக்கப்பட வேண்டும், மேலும் அவை கனடாவின் பாதுகாப்புப் புலனாய்வுச் சேவைக்கு அறிவிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்டியலிடப்பட்ட பயங்கரவாதக் குழுவுக்குச் சொந்தமான சொத்துக்களுடன் தெரிந்து கொண்டே கனடாவில் அல்லது வெளிநாட்டில் உள்ள எவரும் பரிவர்த்தனை செய்வது குற்றமாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தக் குழுக்களுக்குப் பயனளிக்கும் வகையில் சொத்துக்கள் அல்லது நிதிச் சேவைகளை வழங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

