ஜனநாயக ஆட்சிக்கு புதிய அரசியலமைப்பின் தேவை எழுந்துள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் (Cardinal Malcolm Ranjith) தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கும் (Jagath Wickramaratne) கொழும்பு பேராயருக்கும் இடையில் நேற்று (05) பிற்பகல் இடம்பெற்ற சந்திப்புக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி
ஜனநாயகத்திற்கு எதிரான ஊழல் மோசடிகளை விசாரணை செய்வதற்கான வலுவான பொறிமுறையை உருவாக்குவதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையான தகவல்களை வெளியிடுவது மிகவும் முக்கியம்.
இதை யார் செய்தார்கள், என்ன காரணத்திற்காக, யாருடைய உதவியோடு செய்தார்கள் என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
கடந்த காலங்களில் இலங்கையில் இதுபோன்ற பல விடயங்கள் நடந்துள்ளன.
கொலைகள், காணாமல் போதல்கள் போன்ற பல விடயங்கள் உரிய முறையில் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை.
அரசியலமைப்பில் உள்ள பலவீனங்கள்
ஜனநாயகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த தேவையான பொறிமுறையை தயார் செய்ய வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோள்.
அதற்கு தேவையான அரசியலமைப்பு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
தற்போதுள்ள அரசியலமைப்பில் உள்ள பல்வேறு பலவீனங்களை போக்க புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.