உள்ளூராட்சி மன்றங்களில் மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி காணப்பட்ட வேளை, கசூரினா
கடற்கரை பகுதியில் அமைந்துள்ள கடற்படை முகாமை தற்போதுள்ள பகுதியில் இருந்து
அகற்றிவிட்டு அதனை கிழக்கு புறமாக நகர்த்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது.
அந்த தீர்மானத்தினை பிரதேச சபையின் செயலாளர் ஏன் செயற்படுத்தவில்லை என
காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் பாலச்சந்திரன் கேள்வி
எழுப்பியுள்ளார்.
பிரதேச சபையால் நடாத்தப்பட்ட திறப்பு விழா
காரைநகர் கசூரினா கடற்கரையில் உள்ள கடற்படை முகாமை அகற்றுவதற்கும் அதனை
கசூரினா சுற்றுலா மையத்திற்கு கிழக்கு பக்கமாக நகர்த்துவதற்கும் 14.09.2022
கடற்படை அதிகாரிகளின் பிரசன்னத்துடன் கசூரினா கடற்கரை மண்டபத்தில் நடைபெற்ற
பிரதேச சபையின் 54 வது அமர்வில் முடிவெடுக்கப்பட்டது.

எமது சபை கலைக்கப்பட்ட பின்பு செயலாளரினால் இது சம்மந்தமாக என்ன நடவடிக்கை
எடுக்கப்பட்டது? இதுவரை கடற்படை முகாம் ஏன் அகற்றப்படவில்லை?
கடற்படையினரின் முகாமிற்கு விலை மதிப்பீட்டு திணைக்களத்தினால் மதிப்பீடு
செய்யப்பட்ட 1320000 ரூபா நிதி சபையின் மூலதன அபிவிருத்தி நிதியிலிருந்து நான்
தவிசாளராக பதவி வகித்த காலத்தில் ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அண்மையில் கசூரினா கடற்கரைக்கு பிரதேச
சபையால் நடாத்தப்பட்ட திறப்பு விழா ஒன்றிற்கு முழுக்க முழுக்க சபையின்
உத்தியோகத்தர்களே மண்டபத்தில் 95 வீதமானவர்கள் அமர்ந்திருந்தனர்.
அச்சந்தர்ப்பத்தில் உரையாற்றிய செயலாளர் கடற்படை முகாம் அகற்றுவது
தொடர்பாக அமைச்சர் சந்திரசேகரிடம் எதுவித கோரிக்கையும் முன்வைக்கவுமில்லை.
சபையின்
தீர்மானங்களை நிறைவேற்ற பொறுப்பான செயலாளர் தவறிய விடயங்கள் சம்மந்தமாக
தொடர்ந்து எனது பதிவில் எடுத்து வரப்படுவதோடு உரிய உயர் அதிகாரிகளின்
கவனத்திற்கும் கொண்டு செல்லப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

