இலங்கை மின்சார சபையினால் (CEB) சுமார் 40 சதவீதமான சலுகைகளை மின்சார பாவனையாளர்களுக்கு வழங்க முடியும் என மின்சார பாவனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் (Colombo) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அந்த சங்கத்தின் செயலாளர் சஞ்ஜீவ தம்மிக்க (Sanjeeva Dhammika) இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ”இலங்கை மின்சார சபையில் உள்ள பொருளாதார கொலையாளிகளை நீக்குவதற்கு ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜனாதிபதி நடவடிக்கை
அதிகளவான இலாபத்தை ஈட்டியுள்ள இலங்கை மின்சார சபையினால் சுமார் 40 சதவீதமான சலுகைகளை மின்சார பாவனையாளர்களுக்கு வழங்க முடியும்.
தற்போது இலங்கை மின்சார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் நிலக்கரி மோசடியுடன் தொடர்புடையவர்.
இவ்வாறான பொருளாதார கொலையாளிகளைக் கண்டறிந்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) உடனடியாக உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்“ என சஞ்ஜீவ தம்மிக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை மின்சாரக் கட்டணத்தை 10 முதல் 20 சதவீதம் வரை குறைக்க வாய்ப்பு உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அண்மையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.