ஈரான் மீதான தாக்குதலின் மூலம் சர்வதேச விதிகளை அமெரிக்கா மீறியுள்ளதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு கண்டனத்திற்குரியது என்றும், இரு தரப்பினரும் உடனடியாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் எனவும் சீனா குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச விதிகளை மீறிய அமெரிக்கா
இது குறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில், ”ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் கண்டனத்திற்குரியது. இதன்மூலம் ஐக்கிய நாடுகள் அவையின் கொள்கைகள் மற்றும் நோக்கங்களை அமெரிக்கா அவமதித்துள்ளது. போர் தொடர்பான சர்வதேச விதிகளையும் மீறியுள்ளது.

பேச்சுவார்த்தை நடத்தி உடனடி தீர்வு காண வேண்டும்
போர் தொடர்பாக இரு தரப்பினரும், குறிப்பாக இஸ்ரேல் தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி உடனடி தீர்வு காண வேண்டும். இஸ்ரேல் – ஈரான் நாடுகளில் உள்ள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றத்தைத் தணிக்கவும், நிலைத்தன்மையை ஏற்படுத்தவும் சர்வதேச நாடுகளுடன் இணைந்து சீனா செயல்படும். இதுவே சீனாவின் நிலைப்பாடு” எனக் குறிப்பிட்டார்.

