சீனாவில், 1,400 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில், அரசு நிதி நிறுவனத்தின் முன்னாள் பொது முகாமையாளர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
சீனாவில், ‘ஹுவராங் இன்டர்நஷனல் ஹோல்டிங்ஸ்’ என்ற அரசு நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் அதிகாரிகள் மீது, சில ஆண்டுகளுக்கு முன் பல ஆயிரம் கோடி ரூபாய் லஞ்ச குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
சீன ஜனாதிபதியின் உத்தரவு
இது போல பல அரசு நிறுவனங்களிலும் லஞ்ச புகார் எழுந்ததால், அவை குறித்து விசாரிக்க சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் உத்தரவிட்டார்.

அப்படி, ஹுவராங் இன்டர்நஷனல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தில் விசாரித்ததில், அந்நிறுவனத்தின் பொது முகாமையாளர் பய் தியன்ஹுய், 2014 – 2018 வரை பல திட்டங்களின் கொள்முதல் மற்றும் நிதியுதவி செயல்பாடுகளில் சலுகை வழங்க, 1,400 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெற்றது தெரிய வந்தது.
அவருக்கு, சீனாவின் தியான்ஜின் நகர நீதிமன்றம், 2024 மே மாதம் மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அவர், சீன உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். விசாரித்த நீதிமன்றம், ‘பய் தியன்ஹுய், மிக அதிகளவில் லஞ்சம் பெற்றுள்ளார்.அவரது செயல்பாடு அரசு மற்றும் மக்களின் நலன்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது’ எனக்கூறி, மரண தண்டையை கடந்த பிப்ரவரியில் உறுதி செய்தது.
நிறைவேற்றப்பட்டது மரண தண்டனை
இதன்படி, அவரது மரண தண்டனை நேற்று(09) காலை தியான்ஜின் சிறையில் நிறைவேற்றப்பட்டது. கடைசி ஆசையாக, தன் குடும்பத்தினரை சந்தித்து பய் தியன்ஹுய் பேசினார். சீனாவில் பொதுவாக விஷ ஊசி அல்லது துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படும். பய் தியன்ஹுய்க்கு எந்த முறையில் தண்டனை நிறைவேற்றப்பட்டது என்பது தெரியவில்லை.

பய் திபன்ஹுய் பணியாற்றிய, அதே ஹுவராங் அரசு நிதி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் லை ஷாவ்மின் என்பவருக்கும், 2,200 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில், 2021 ஜனவரியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

