ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒரு வாக்காளருக்குச் செலவிடும் தொகையை விட அதிகமாகச் செலவு செய்துள்ளதாக நீதிமன்ற விசாரணையில் தெளிவான தகவல் தெரியவந்தால், சம்பந்தப்பட்ட வேட்பாளரின் குடியுரிமை மூன்றாண்டுகளுக்கு ரத்து செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வரலாற்றில் இவ்வாறு குடியுரிமைகள் இல்லாதொழிக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் உண்டு என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கும் வகைப்பாடு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழு
இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளர்களின் வருமானம் மற்றும் செலவு விபரங்கள் தேர்தலின் பின்னர் பத்திரிகை விளம்பரங்கள் மற்றும் இணையத்தளங்களில் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
செலவின விவரங்கள் முரண்பாடாகவோ அல்லது தவறான தகவல் தரப்பட்டிருந்தாலோ, காவல்துறையில் முறைப்பாடு செய்வதற்கும், எந்நேரத்திலும் அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவதற்கும் சட்டத்தின் மூலம் மக்களுக்கு அனுமதி உண்டு என ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
இதேவேளை, ஒவ்வொரு தேர்தலின் முடிவிலும் முப்பத்தொரு நாட்களுக்குள் சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த அறிக்கையை வழங்க வேண்டும் என ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வேட்பாளர்களின் செலவு விவரங்களை 21 நாட்களுக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.