சாதாரண நடைமுறையின் மூலம் கடவுச்சீட்டைப் பெறுவதற்கு சுமார் 5 மாதங்கள் ஆகும் என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஒன்லைன் முறையின் கீழ் திகதியை முன்பதிவு செய்யும் விண்ணப்பதாரி, ஐந்து மாதங்களின் பின்னர் கடவுச்சீட்டை பெறுவதற்கான திகதியை பெறுவார் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கடவுச்சீட்டுக்கான முன்பதிவு
“நீங்கள் ஒன்லைனில் ஒரு திகதியை முன்பதிவு செய்து அந்த திகதியில் வந்து அதே நாளில் கடவுச்சீட்டை பெறலாம்.
உதாரணமாக, நீங்கள் இன்று ஒரு திகதியை முன்பதிவு செய்தால், கிடைக்கும் திகதி ஜூன் மாதம் 27ஆம் திகதியாகும்.
அதாவது நீங்கள் ஒன்லைனில் ஒரு திகதியை முன்பதிவு செய்தால், தோராயமாக 5 மாதங்களுக்கு முன்பே உங்களுக்கு ஒரு திகதி கிடைக்கும்.
எனினும் அவசர தேவைக்காக வெளிநாட்டு அனுமதிகளை பெறுவது அவசியமானால், அதற்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக திணைக்களத்தில் ஒரு குழு நிறுவப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அவசரகால கடவுச்சீட்டு
அவசரகால கடவுச்சீட்டு தேவைப்படும் எவரும் தங்கள் தேவையை உறுதி செய்து அதே நாளில் கடவுச்சீட்டு பெறலாம் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
எனினும், இந்த திட்டமிடப்பட்ட திகதிக்கு முன்னர் அவசரத் தேவைக்காக யாராவது கடவுச்சீட்டை பெற வேண்டியிருந்தால், கடவுச்சீட்டு பெறுவதற்குத் தேவையான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
ஒன்லைன் முறை மூலம் ஒரு நாளைக்கு 800 கடவுச்சீட்டு வழங்கப்படுகின்றது. ஒன்லைனில் திகதிகளை முன்பதிவு செய்தவர்களுக்கு ஒரு நாளைக்கு 800 கடவுச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன.” என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.