புதிய வருடத்தில் கடமைகளை ஆரம்பிக்கவுள்ள முதல் நாளான இன்று (01.01.2025) அனைத்து அரச நிறுவனங்களிலும் உத்தியோகபூர்வ வைபவம் இடம்பெறவுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
அமைச்சின் செயலாளரின் ஊடாக சுற்றறிக்கை ஒன்று வௌியிடப்பட்டு, அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டவாக்க பேரவை தலைவர்களுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய வருடத்தில் “க்ளீன் ஶ்ரீலங்கா” (தூய்மையான இலங்கை) தேசிய வேலைத்திட்டத்துடன் உத்தியோகபூர்வ செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரச துறை மற்றும் தனியார் துறையினரால் முன்னெடுக்கப்படும் “க்ளீன் ஶ்ரீலங்கா” (தூய்மையான இலங்கை) வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) தலைமையில் இன்று (01.01.2025) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.