யாழ்ப்பாணம் மாநகர சபையை இலங்கைத் தமிழரசுக் கட்சி கைப்பற்றியது போல் கொழும்பு
மாநகர சபையில் எதிர்வரும் திங்கட்கிழமை ஐக்கிய மக்கள் சக்தியே ஆட்சியமைக்கும்
என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“யாழ்ப்பாணம் மாநகர சபையைக் கைப்பற்ற தேசிய மக்கள் சக்தி வகுத்த இரகசிய
வியூகம் தவிடிபொடியாகியுள்ளது.
சில கட்சிகளின் ஆதரவுடன்
தோல்விப் பயத்தில் தேசிய மக்கள் சக்தியில்
இருந்து மேயர் பதவிக்கு எவரும் போட்டியிடவில்லை.
இலங்கைத் தமிழரசுக் கட்சியை
எதிர்த்துப் போட்டியிட்ட தரப்பினருக்கும் தேசிய மக்கள் சக்தியினர் ஆதரவு
வழங்கவும் இல்லை. நடுநிலை என்ற பெயரில் தேசிய மக்கள் சக்தியினர்
பின்வாங்கியுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாநகர சபையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியானது ஐக்கிய மக்கள் சக்தி
உட்பட மூன்று கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது.
அதேபோல் கொழும்பு மாநகர
சபையிலும் சில கட்சிகளின் ஆதரவுடன் ஐக்கிய மக்கள் சக்தியே ஆட்சியமைக்கும்” என்றும் குறி்பிட்டுள்ளார்.
பெரும்பான்மையை நிரூபிப்பதற்குரிய ஆதரவு
கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்குரிய அறுதிப் பெரும்பான்மைப் பலத்தை
எந்தவொரு கட்சியும், சுயேட்சைக் குழுவும் பெறவில்லை.
எனினும், அறுதிப் பெரும்பான்மையை நிரூபிப்பதற்குரிய ஆதரவு பெறப்பட்டுவிட்டது
என தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
மறுபுறத்தில் எதிரணிகளை ஒன்றிணைத்து
ஆட்சியமைப்பதற்குப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி முயற்சித்து
வருகின்றது.
கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பது தொடர்பான கூட்டத் தொடர் எதிர்வரும் 16
ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.