அரசு வாகனங்களை விற்பனை செய்ததில் அரசாங்கத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர (Dayasiri Jayasekara), இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய போது அவர் மேற்கண்ட விடயத்தை கூறியுள்ளார்.
பொது ஏலத்தில் வாகனங்களை விற்காமல் டெண்டர் நடைமுறையை ஏற்றுக்கொண்டதன் மூலம் அரசாங்கத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்திற்கு இழப்பு
இதன்படி, பொது ஏலத்தில் வாகனங்கள் விற்கப்பட்டிருந்தால் அரசுக்கு சுமார் ரூ.650 முதல் 700 மில்லியன் வரை வருவாய் கிடைத்திருக்கும் என்றும் தயாசிறி சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், 17 வாகனங்களை விற்பனை செய்ததன் மூலம் அரசுக்கு ரூ.200 மில்லியன் மட்டுமே வருவாய் கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு அளிக்க தாங்கள் எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

