இலங்கையின் வெளியுறவுக் கொள்கை தொடர்பான கொள்கை முரண்பாடுகள் தற்போது
அரசாங்கத்துக்குள்ளேயே ஒரு தீவிரமான உள்நாட்டுப் போராட்டத்தை
ஏற்படுத்தியுள்ளது.
அரசாங்கத்தில் உயர்மட்டத்தில் ஏற்பட்டுள்ள கொள்கை ரீதியான முரண்பாடுகள்
வெளியுறவுக் கொள்கையிலும் தாக்கம் செலுத்தியுள்ளன என்று கூறப்படுகின்றது.
குறிப்பாக மேற்குலக சார்பு நிலையில் ஒரு தரப்பும், மார்க்சிசம் அல்லது சோசலிச
சீன சார்பு கொள்கையில் மற்றொரு தரப்பும் ஆளும் கட்சிக்குள்
செயல்படுகின்றமையானது, நாட்டின் வெளியுறவுக் கொள்கையை நிலையான போக்கில்
முன்னெடுப்பதற்கு சவால்களை ஏற்படுத்துகின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது.
எந்தவொரு நாட்டுடனும் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ளாது இலங்கையின் பொருளாதார
நலன்களை கருத்தில் கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர்
ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் செயற்படுகின்றனர்.
குறிப்பாக மேற்குலக நாடுகளுடன் இவர்கள் கூடுதலான உறவை வளர்க்க
விரும்புகின்றனர். இந்த அணுகுமுறை காரணமாகவே அமெரிக்காவின் பக்கமிருந்து
பெரும் ஆதரவுகள் அரசாங்கத்துக்குக் கிடைத்தன.

மார்க்சிசம் அல்லது சோசலிச சார்பு கொள்கை
இருப்பினும், மார்க்சிசம் அல்லது சோசலிச சார்பு கொள்கையில் இருக்கும் ஆளும் கட்சியின்
மற்றொரு தரப்பான மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா
மற்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோர் சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளின்
ஆதரவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.
இந்தக் கடுமையான இழுபறி காரணமாக, இலங்கையின் பொருளாதாரத்துக்கு முக்கியமான
அம்பாந்தோட்டை சீன எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், கெரவலப்பிட்டிய மற்றும்
சப்புகஸ்கந்த போன்ற பல பாரிய வெளிநாட்டு முதலீட்டுத் திட்டங்கள் இன்னும்
ஆரம்பிக்கப்படாமல் முடங்கியுள்ளன.
சமீபத்தில், அரசாங்கம் இந்தக் கொள்கை ரீதியான நெருக்கடிகளை தீர்க்கும் வகையில்
சில திட்டங்களை முன்னெடுத்திருந்தது. கடவத்தை – மீரிகம அதிவேக நெடுஞ்சாலையின்
எஞ்சிய பணிகள் மீண்டும் சீனாவுக்கு வழங்கியது. இதற்கான கடனை அமெரிக்க
டொலர்களுக்குப் பதிலாக சீன யுவானில் பெறுவதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்தது.
மேலும் அம்பாந்தோட்டை சுத்திகரிப்பு நிலையத்திற்கான சினோபெக் நிறுவனம் கேட்ட
40 வீத சந்தை வாய்ப்பை வழங்கவும் இணக்கப்பாடு எட்டப்பட்டது.
அரசாங்கத்தின் இந்த மாற்றத்தைக் கண்காணித்த அமெரிக்கா உடனடியாக
எதிர்வினையாற்றியது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் நியூயோர்க் விஜயத்தின்
போது, அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அமெரிக்க தரப்புடன் கலந்துரையாடல்களில்
இதன்போது ஈடுபட்டுள்ளார்.

அமெரிக்காவின் கவலை
அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைச் சீனாவுக்கு வழங்குவது
குறித்து அமெரிக்காவின் கடுமையான கவலைகள் உள்ளன என இராஜாங்கத் தினைக்களத்தின்
அரசியல் விவகாரங்களுக்கான துணை வெளியுறவுச் செயலாளர் அலிசன் ஹூக்கர்
நேரடியாகக் கூறியிருந்தார் எனவும், அதற்கு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்,
இது முந்தைய அரசாங்கத்தின் முடிவு என்றும், மாற்ற முடியாது என்றும்
குறிப்பிட்டார் எனவும் ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.
அத்துடன்
இலங்கைக்கு முதலீடுகள் தேவைப்படும போது அமெரிக்கா இன்னும் எந்த முதலீட்டையும்
செய்யவில்லை என்றும் அரசாங்கம் பதிலளித்துள்ளது.
இதற்குப் பின்னரே, அமெரிக்க வெளியுறவுத் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டு,
மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) கொள்கைகள் காரணமாக முதலீட்டாளர்கள் வர
அஞ்கின்றனர் எனவும், வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கையில் ஒத்திசைவின்மை
இருப்பதாகவும் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தெற்கு
மற்றும் மத்திய ஆசியாவிற்கான சிறப்புத் தூதுவரான செர்ஜியோ கோர் மற்றும்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போது, சீன முதலீடுகள் குறித்து விவாதிக்கப்படவில்லை.
அதற்குப் பதிலாக, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விதித்த 20 வீத வரியைக் குறைப்பது மற்றும்
பாதுகாப்பு விவகாரங்கள் குறித்துப் பேசப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, இலங்கையின்
பாதுகாப்புக்காக மேலும் ஒரு கரையோரப் பாதுகாப்பு கப்பல் மற்றும் கண்காணிப்பு
சீ1-30 ஹெலிக்கொப்டரை வழங்க அமெரிக்கா அவதானம் செலுத்தியுள்ளமை
குறிப்பிடத்தக்கது.

