ஊடகவியலாளர் சசி புண்ணிய மூர்த்திக்கு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகத்துறை தொழில் சங்க சம்மேளனம் (FMETU) கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளது.
ஊடகத்துறை தொழில் சங்க சம்மேளத்தினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அச்சுறுத்தலுக்கும் காவல்துறையினரின் விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்காலிகமாக நாட்டை விட்டு வெளியேறிய ஊடகவியலாளர் சசி புண்ணியமூர்த்தி நாட்டில் இல்லாத காரணத்தால் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டுக்குள் வர முடியாத நிலை
இந்த நிலையில், ஊடகவியலாளர் தற்போது நாட்டுக்குள் வர முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாக குறித்த கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் மாறி மாறி வந்த அரசாங்கங்கள் தொடர்ச்சியாக ஊடக சுதந்திரத்திற்கும் ஊடகவியலாளர்களுக்கும் அச்சுறுத்தல்களையும் வழக்கு விசாரணைகளும் தொடர்ந்த வண்ணமாகவே உள்ளதாகவும் உடனடியாக ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல்கள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.