ராஜபக்சர்கள் மீது முன்வைத்த குற்றச்சாட்டுக்களை சட்டத்தின் முன் ஆதாரபூர்வமாக நிரூபிக்க வேண்டும் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திற்கு பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் (Sagara Kariyawasam) சவால் விடுத்துள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் மேற்கண்டவாறு சவால் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நாங்கள் தற்போது பொதுஜன பெரமுன கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம், கட்சியின் முக்கிய பதவிகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன.
முன்வைத்த குற்றச்சாட்டு
2029ஆம் ஆண்டு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு சவால் விடுக்கும் பிரதான அரசியல் கட்சியாக எழுச்சிப் பெறும்.
நாட்டு மக்களை தவறாக வழிநடத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி குறிப்பிட்ட பொய் இன்று அரசாங்கத்துக்கே வினையாக மாறியுள்ளது, வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்.
அத்துடன் ராஜபக்சர்கள் மீது முன்வைத்த குற்றச்சாட்டுக்களை சட்டத்தின் முன் ஆதாரபூர்வமாக நிரூபிக்க வேண்டும், ஜனாதிபதி அநுர குமார இந்தியாவுடன் செய்துக் கொண்ட ஒப்பந்தங்கள் குறித்து அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படவில்லை.
குறிப்பாக எட்கா ஒப்பந்தத்தை குறிப்பிட வேண்டும், குறுகிய அரசியல் மாற்றத்துக்காக அடிக்கடி கொள்கைகளை மாற்றிக் கொள்வது முறையற்றதாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.