தமிழரசுக் கட்சியை மலினப்படுத்துவது தான் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் ஒரே வேலை எனவும் அவருடன் பேச்சுவார்த்தை வேண்டாம் எனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக்
கிளைத் தலைவர் சி.இரத்தினவடிவேல் தெரிவித்துள்ளார்.
கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைத்தியர்
ப.சத்தியலிங்கத்துக்கு எழுதிய கடிதம் ஒன்றிலேயே அவர் இந்த விடயங்களைத் தெளிவுப்படுத்தியுள்ளார்.
குறித்த கடிதத்தில் மேலும்,
2015 முதல் 2020ஆம் ஆண்டுவரையான காலப் பகுதியில் 84 தடவைகள் அனைத்துக்
கட்சிகளும் கூடி ஓர் அரசமைப்பு வரவைத் தயாரித்தன.
தேர்தல் வாக்குறுதி
அதில் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பாக தமிழரசுக் கட்சி முழு மூச்சில் ஈடுபட்டு சமஷ்டி அம்சங்களைக்
கொண்ட பல முன்னேற்றகரமான அம்சங்களை உள்ளீடு செய்ய வைத்தது.
ஐந்து ஆண்டு இடைவிடா முயற்சியின் பின்னர் இறுதி வரைவில் சம்பந்தன் ஐயா,
அடைக்கலநாதன், சித்தார்த்தன் ஆகியோர் அதிலுள்ள சிறந்த விடயங்களைக்
கருத்திற்கொண்டு கையொப்பமிட்டனர்.
தற்போது ஆட்சியிலிருக்கும் தரப்பும் அதனை
ஏற்றுக்கொண்டது. அதனை ஏற்று மேலும் திருத்தங்கள் செய்து புதிய அரசமைப்பைக்
கொணரப்போவதாக இந்த அரசு தனது தேர்தல் வாக்குறுதியாக மக்களுக்கு வழங்கியுள்ளது.
இதில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கட்சி தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை.
இப்போது இந்த ஐந்து ஆண்டு எமது கட்சியினதும் தலைவர்களினதும் முயற்சியை
செல்லாக்காசாக்க அவர் முயற்கின்றார். தவிரவும், எப்போதுமே தமிழர் நன்மைகளை விட
தமிழரசுக் கட்சியை மலினப்படுத்துவதையே மேலான செயற்பாடாகக் கொண்டிருக்கும்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த முன்னேற்றகரமான அரசமைப்பு வரைவைக் குறை
கூறினார்.
கபடத் திட்டம்
அதற்கு முக்கிய காரணம் தமிழரசின் பங்களிப்புடன் வரும் இந்த
ஏற்பாடுகளை எதிர்க்க வேண்டுமே என்பதே அன்றி வேறேதும் இல்லை.
இந்தப் பின்னணியில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இப்போது இதனைப் புறந்தள்ளி
தான் முன்பு முன்நிலைப்படுத்திய விக்னேஸ்வரன் தலைமையிலான ஆலோசனைகளை முன்தள்ள
முற்படுகின்றார்.
இந்த யோசனைகளை தமிழரசு எப்போதுமே ஏற்றுக்கொண்டதில்லை.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இப்போது தமிழரசுக் கட்சிக்குப் பெயர்
போய்விடக்கூடாதே என்ற எண்ணத்தில் தன்னை முன்னிலைப்படுத்தும் ஒரு கபடத்
திட்டத்துக்குத் தமிழரசுக் கட்சியை உடந்தையாக்கப் பார்க்கின்றார்.
தமிழரசுக்
கட்சியை எப்போதுமே மலினப்படுத்தும் செயற்பாடுகளைச் செய்து வந்தவர் இப்போது
அந்தக் கட்சியிலுள்ளதாகக் கருதப்படும் உள்ளக முரண்பாடுகளை மேலும்
விரிவுபடுத்தும் உள்நோக்குடன் கட்சியைப் புறந்தள்ளி நாடாளுமன்ற உறுப்பினர்
சிறீதரனுடன் பேச முற்படுகின்றார் – என்றுள்ளது.