சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் என்ற கருத்தியலுக்கு நான் கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதியே உடன்படவில்லை என தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண அவைத்தலைவருமான சி.வி.கே.சிவஞானம் (C. V. K. Sivagnanam) தெரிவித்துள்ளார்.
அந்த விடயம் சாத்தியமற்றது, விசப் பரீட்சையாக முடியும் அல்லது வேட்பாளர் தெரிவில் சிக்கல் வரும் என்று கூறியிருந்தேன் அதுதான் தற்போதைய நிலைப்பாடும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழில் நேற்று (15) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல்
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் “இலங்கை தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரையில் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற முடிவை மக்களிடமே விட்டுவிட வேண்டும்.
இதேவேளை நாங்கள் தனி நபரை அல்லது தனி வேட்பாளரை சுட்டிக்காட்டி சிபார்சு செய்வதை தவிர்க்க வேண்டும் என மத்திய செயற்குழுக் கூட்டத்தில் குறிப்பிட்டிருந்தேன்.
பொது வேட்பாளர் விடயத்தில் மிக முக்கியமானவர்கள் எல்லோரும் சேர்ந்து மக்களை உசுப்பேத்தி தமிழரசுக் கட்சியை வழிக்கு கொண்டு வருவதாக குறிப்பிட்டனர். ஆனால் தமிழரசுக் கட்சியை கட்சிக்காரன் தான் வழிக்கு கொண்டுவர முடியும். வேறு யாரும் வழிக்கு கொண்டுவர முடியாது என நாங்கள் பதிலளித்தோம்.
தமிழ் பொது வேட்பாளர்
இது குறித்து நாங்கள் இன்னமும் ஆதரவோ எதிர்ப்போ என்ற நிலையில் இல்லை. ஆனால் உடன்பாடில்லாத நிலைப்பாட்டில் இருப்பதுடன் கட்சி இன்னும் முடிவெடுக்கவில்லை, நாங்கள் சிங்களவருக்கு ஆதரவாக தான் தமிழ் பொது வேட்பாளரை எதிர்ப்பதாக சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர் அது தவறு.
கடந்த 11ஆம் திகதி நடைபெற்ற கட்சியினுடைய மத்திய செயற்குழுக் கூட்டத்தில் நாங்கள் ஒரு வேட்பாளரை தனித்து ஆதரிக்க கூடாது என்ற முடிவை முன்வைத்துள்ளளேன்.
அதற்கு காரணம் எந்த ஒரு வேட்பாளரை நாங்கள் கைகாட்டுகின்றோமோ அவர் தோற்பதால் தென்னிலங்கை அதை வைத்து தமிழர்களுக்கு சாதகமாக நாட்டை விற்கப்போகின்றார்கள் என்ற நிலைப்பாட்டில் தோற்கக் கூடிய வாய்ப்பு தான் காணப்படுகின்றது. இந்தமுறையும் சஜித் வந்து எங்களுடன் கதைத்த மறுநாளே அங்கு இனவாதம் கக்கியிருக்கும்.” என தெரிவித்தார்.
https://www.youtube.com/embed/jwvf3MSwYVI