இலங்கைத் தமிழரசுக் கட்சி ஒற்றையாட்சி முறைமையை ஏற்றுக்கொள்ள மாட்டாது என்பதுடன்
அவற்றை முழு வீச்சில் எதிர்க்கும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின்
தலைவர் சி.வி.கே.சிவஞானம் (C. V. K. Sivagnanam) தெரிவித்துள்ளார்.
ஒற்றையாட்சி முறைமையை தமிழரசுக் கட்சி ஏற்றுக் கொண்டுவிட்டதாக அண்மைய
தேர்தல் பரப்புரை கூட்டங்களில் எதிர்தரப்பினரால் தெரிவிக்கப்படும் கருத்து
தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர்
மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கைத் தமிழரசுக் கட்சி ஒற்றையாட்சியை ஆதரிக்கிறது என்னும் கருத்தை நாம்
தெளிவாக மறுத்துள்ள போதும் சிலர் பொது வெளியில் தொடர்ந்து பேசுகின்றனர்.
ஒற்றையாட்சி
முதலில், ஒற்றையாட்சியை ஏனைய அரசியல் கட்சிகள் ஏற்றுநின்ற காலகட்டத்தில் அதனை
மறுதலித்து சமஷ்டி முறையான அரசமைப்பை கோரி உருவாக்கப் பட்டதே , சஷ்டிக் கட்சி
என்றும் அழைக்கப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி என்பதை நினைவுபடுத்த
விரும்புகிறேன்.

மேலும், ஜனாதிபதி அநுர குமார திசநாயக்கவோ, அவரது கட்சி சார்ந்த அமைச்சர்களோ
அல்லது ஜே.வீ. பீ கட்சியின் முக்கியர்த்தர் எவருமோ ” ஏக்கிய ராஜ்ய ” என்ற
சொற்கள் அடங்கிய அரசியல் அமைப்பு வரைவில் இருந்து புதிய வரைபை தொடரலாம்
என்று எந்த இடத்திலும் கூறவில்லை.
அப்படிக் கூறி இருந்தால் நாம் அதனை ஏற்பதாகக் கூறியதாக சொல்பவர்கள் அவர்கள்
எங்கே எப்பொழுது, கூறினார்கள் என்பதையும் நாம் எப்பொழுது எங்கே அவ்வாறு
ஏற்பதாக கூறினோம் என்பதையும் ஆதாரத்துடன் தெரிவிக்க வேண்டும்.
அதை விடுத்து பொத்தம் பொதுவாக சகட்டு மேனிக்கு பேசுவது பொருத்தம் அற்றதும்
அபத்தமானதும் ஆகும்.
தமிழரசுக் கட்சி
‘ஏக்கிய ராஜ்ய’ என்ற சொற்பதம் பற்றி 2019 ஆம் ஆண்டுக்குப் பின்பு சிங்களவர்
எவரும் பேசுவது இல்லை. அது அரசாங்கத்தினாலும் எம்மாலும் எப்போதோ கைவிடப்பட்ட
ஒன்று.
ஆனால், இங்கே மட்டும் இல்லாத ஒரு ஊருக்கு பெயர்
வைப்பது போன்று இதனை காழ்ப்புணர்வு காரணமாக தமிழரசுக் கட்சியின் பெயரைக்
கெடுக்கும் நோக்கில் மீண்டும் மீண்டும் பேசுகிறார்கள்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் என்ற ரீதியிலும் கட்சியின் மிக சிரேஸ்ட
நிலையில் உள்ளவன் என்ற வகையிலும் கட்சியின் கொள்கை வகுத்தலில் முக்கியபங்கு
வகிப்பவன் என்ற வகையிலும் எமது கட்சி ஒற்றையாட்சி முறைமையையோ ” ஏக்கிய ராஜ்ய
” என்ற முறைமையையோ ஏற்றுக்கொள்ள மாட்டாது
மட்டுமல்ல அவற்றை முழு வீச்சில் எதிர்க்கும் என்பதையும்
தெரிவித்துகொள்கின்றேன்.
நாடாளுமன்றத்தில் எதிர்வாதம்
அவ்வாறு ஏதாவது முன்மொழிவு அரசினால் முன்வைக்கப்பட்டால் அதனை எமது எட்டு
நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் எதிர்வாதம் செய்து எதிர்த்து
வாக்களிப்பார்கள் என்றும் ஏற்கெனவே நான் கூறி இருக்கிறேன்
இதனை மீண்டும் வலியுறுத்துகிறேன்.
இந்தக் கருத்தை தெரிவிக்கும் பொறுப்பும் உரிமையும் எனக்கு உண்டு என்பதையும்
திடமாக வலியுறுத்துகிறேன்.

ஒருவேளை நான் ஒரு மேட்டுக்குடி சாராதவன் என்பதால் யாராவது மேட்டுக்குடி
சார்ந்தவர்தான் சொல்ல வேண்டும் என நினைக்கிறார்களோ தெரியவில்லை. அவர்களுக்கு எல்லாம் நான் கூறிக்கொள்வது இலங்கைத் தமிழரசுக் கட்சி சாமானிய
மக்களுக்கானது.
அவர்களில் ஒருவன் நான் ஆயினும் எந்த மேட்டுக்குடியினர்க்கும்
குறைந்தவனும் அல்ல, நீங்கள் எதிர்பார்ப்பது போல இனிமேல் எந்த மேட்டுக்குடி
மேலாதிக்ககாரரும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் இறக்குமதி செய்யப்பட
மாட்டார்கள் என்பதையும் ஆணித்தரமாக பதிவு செய்கிறேன்.” என அவர் தெரிவித்துள்ளார்.

