தமிழினப்படுகொலைக்கு பொறுப்புக்கூறும் வகையில் சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்துதல் தொடர்பான சர்வதே நிபுணர்களின் கருத்தாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெனீவா, ஐ.நா மனித உரிமைச்சபையின் 51வது கூட்டத் தொடர் தொடங்கிவிருக்கின்ற நிலையிலேயே நாளை (05.09.2024) வியாழக்கிழமை இணையவழியில் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
தமிழினப்படுகொலை
இந்த கருத்தாடலில், சர்வதேச வல்லுனரும், சிறிலங்காவை கண்காணிக்கும் பன்னாட்டு குழுவின் (MAP) பொறுப்பாளருமாக இருந்த, ஜெஃப்ரி ராபர்ட்சன் (Geffrey Robertson AC KC) மற்றும் போர்குற்ற விவகாரங்களுக்கு பொறுப்பாக இருந்த அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் ஸ்டீபன் ராப் (Stephen Rapp), நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் (V. Urudhrakumaran), சிறிலங்காவின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் (Sivajnanam Sridharan) ஆகியோர் பங்கெடுக்கவுள்ளனர்.
சிறிலங்காவின் ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி, தமிழர் தேசத்தின் நிலைப்பாட்டை அனைத்துலகிற்கு உரத்துரைக்க தமிழ்பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டிருக்க, மறுபுறம் நடந்தேறிய தமிழினழிப்படுகொலைக்கு பொறுப்புக்கூற வைக்க சிறிலங்காவை அனைத்துலக குற்றவியில் நீதிமன்றில் பாராப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகின்றது.
நியு யோர்க் நேரம் காலை 8 மணி, பிரித்தானிய நேரம் மதியம் 1 மணி, இலங்கை நேரம் மாலை 5:30 மணிக்கு இடம்பெற இருக்கின்ற இக்கருத்தாடலை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் TGTE.TV வலைக்காட்சியூடாக காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்ததக்கது.